தாக்குதல் நடத்தியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் நடத்தியதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

Update: 2024-11-11 06:17 GMT

கோப்புப்படம்

மதுரை,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அத்திபட்டியில் நேற்று மாலை அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை முடித்துவிட்டு அவர் திருமங்கலம் நோக்கி காரில் சென்றார். ஆர்.பி.உதயகுமாருடன் அவருடைய ஆதரவாளர்கள் சிலரும் காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது மங்கல்ரேவு பகுதியில் அவருடைய ஆதரவாளர்களின் கார்களை அ.ம.மு.க. நிர்வாகிகள் திடீரென மறித்தனர். பின்னர் அவர்கள், டிடிவி தினகரன் குறித்து அவதூறாக பேசியதாக ஆர்.பி.உதயகுமாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பி அவர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் ஆர்.பி.உதயகுமாருடன் வந்த அவரது ஆதரவாளர்களின் கார்களை தாக்கி சேதப்படுத்தினர்.

இந்த தாக்குதலில் உசிலம்பட்டியை சேர்ந்த மதுரை மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை இணை செயலாளர் தினேஷ்குமார், அபினேஷ், விஷ்ணு உள்ளிட்டோர் காயம் அடைந்தனர். இதையடுத்து 3 பேரும் சிகிச்சைக்காக மதுரைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பேரையூர் துணை போலீஸ் சூப்பிரண்டு துர்கா தேவி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை காவல் கண்காணிப்பாளரிடம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று புகார் மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். அ.தி.மு.க.வினர் மீது தாக்குதல் நடத்திய அ.ம.மு.க.வினர் மீது சட்ட நடவடிக்கை வேண்டும். இ.பி.எஸ்.சின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் காழ்ப்புணர்ச்சியால் தாக்குதல் நடத்தப்படுகிறது. பொது வாழ்க்கையில் ஈடுபடுவோருக்கு பாதுகாப்பு இல்லை" என்று அவர் கூறினார்.

இதனிடையே இந்த சம்பவத்தில் அ.ம.மு.க.வினர் 6 பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்