பயிர் காப்பீடு வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 96 கிராமங்களுக்கு பயிர் காப்பீடு தொகை விடுபட்டுள்ளதால் உடனடியாக வழங்க கோரி பாதிக்கப்பட்ட விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பயிர் காப்பீடு
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் நெல் விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டது. பயிர்காப்பீடு செய்திருந்ததால் தங்களின் கடனை அடைக்க அரசின் நிவாரணமும், பயிர் காப்பீடு தொகை உதவியாக இருக்கும் என்று நம்பி விவசாயிகள் காத்திருந்தனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கியது. அரசின் நிவாரணம் கிடைத்த நிலையில் பயிர்காப்பீடு வழங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பயிர் காப்பீடு நிறுவனம் விவசாயிகளுக்கு வறட்சியின் அடிப்படையில் காப்பீடு தொகை வழங்கி உள்ளது. இதில் 96 கிராமங்களுக்கு மட்டும் பயிர் காப்பீடு தொகை வழங்கப்படாமல் விடுபட்டுள்ளது.
மனு
இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் நேற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்தனர். ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. விவசாய அணி தலைவர் சோழந்தூர் பாலகிருஷ்ணன், துணைத்தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் ஆண்கள், பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் காப்பீட்டு தொகை வழங்கப்படாததை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சார்பில் ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணுசந்திரனை சந்தித்து மனு அளித்தனர்.
இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து மீண்டும் ஆய்வு செய்து இன்சூரன்சு நிறுவனத்திடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். விரைந்து நடவடிக்கை எடுத்து பயிர் காப்பீடு தொகை கிடைக்காவிட்டால் அனைத்து விவசாயிகளும் ஒன்று சேர்ந்து கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
பரபரப்பு
கலெக்டர் அலுவலகத்தை ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் குவிக்கப்பட்டு கூட்டத்தை ஒழுங்குபடுத்தி விவசாய சங்க நிர்வாகிகளை மட்டும் அழைத்து சென்று கலெக்டரிடம் மனு அளிக்க வைத்தனர்.