விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

விருதுநகரில் 58 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

Update: 2024-11-10 02:23 GMT

விருதுநகர்,

2 நாள் சுற்றுப்பயணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று விருதுநகர் வந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் சிவகாசி அருகே கன்னிச்சேரி புதூரில் பட்டாசு ஆலையில் கள ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள தொழிலாளர்களிடம் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார்.

நேற்று மாலையில் விருதுநகரில் வாகன பேரணி (ரோடு ஷோ) நிகழ்ச்சி நடந்தது. இதில் வாகனத்தில் அமர்ந்தபடி, வழிநெடுகிலும் திரண்டு இருந்த பல்லாயிரக்கணக்கான பெண்கள், தி.மு.க. தொண்டர்களை சந்தித்து உற்சாகமாக கை அசைத்தார். அப்போது ஏராளமானோர் போட்டிபோட்டு அவருடன் கைகுலுக்கினர். மனுக்களை அளித்தனர். தொடர்ந்து விருதுநகர் மருத்துவ கல்லூரி அருகே ஒரு மண்டபத்தில் நடந்த தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசினார்.

வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சி மீண்டும் அமையும் என சூளுரைத்தார். தேர்தல் பணிகளில் எவ்வாறு ஈடுபட வேண்டும், எதிர்க்கட்சிகள் விமர்சனங்களுக்கு எவ்வாறு பதிலடி கொடுக்க வேண்டும் என்பது பற்றி ஆலோசனைகள் வழங்கினார். தொடர்ந்து, நேற்று இரவு ஆர்.ஆர். நகரில் உள்ள ராம்கோ விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

இந்நிலையில் இன்று காலை விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வருகை தந்தார். அங்கு ரூ.77 கோடியில் 6 தளங்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கலெக்டர் அலுவலக புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். 

இதோடு சேர்த்து மொத்தம் ரூ.101 கோடியில் முடிவுற்ற திட்ட பணிகளையும் அவர் திறந்து வைத்தார். பின்னர் விருதுநகர் அருகே பட்டம்புதூரில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்துகொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.471 கோடியில் 57 ஆயிரத்து 556 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்களை வழங்கி பேசுகிறார்.

இதற்காக அங்கு கோட்டை முகப்பு போன்ற நுழைவுவாயிலுடன் கூடிய பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. முதல்-அமைச்சர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்