மி்னசாரம் தாக்கி பலியான தொழிலாளி உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக போராட்டம்

நெல்லை அருகே, மின்சாரம் தாக்கி பலியான தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மின்சார வாரிய ஊழியர்கள் 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

Update: 2023-02-22 20:05 GMT

நெல்லை டவுன் கோட்டையடி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவர் மின்சார வாரியத்தில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சிவகாமி என்ற மனைவியும், சபரீஷ் என்ற 3 வயது மகனும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மணிகண்டன் கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் மின்பாதை சீரமைப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதற்காக அங்குள்ள மின்கம்பத்தில் ஏறி வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது இவர் மின்சாரம் தாக்கி இறந்தார்.

இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மணிகண்டன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நேற்று முன்தினம் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்து மணிகண்டனின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருந்தாலும் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், பராமரிப்பு பணிக்காக மின்வினியோகம் தடை செய்யப்பட்டு இருந்த நிலையில் மின்சாரம் பாய்ந்தது எப்படி? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு காரணமான மின்வாரிய அதிகாரிகள், தனியார் ஆலை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம், என்றனர்.

இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக மணிகண்டனின் உறவினர்கள் தமிழர் விடுதலை களம் நிறுவன தலைவர் ராஜ்குமார் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆஸ்பத்திரியில் மணிகண்டன் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உயிரிழந்த மணிகண்டன் குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ.50 லட்சம் வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்க செயலாளர் கந்தசாமி, தமிழர் விடுதலை களம் தலைவர் ராஜ்குமார் மற்றும் மணிகண்டனின் மனைவி சிவகாமி, உறவினர்கள், மின்சார வாரிய தொழிலாளர்கள், பல்வேறு அமைப்பினர் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், இறந்த மணிகண்டனின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரண தொகை வழங்க வேண்டும். அவருடைய மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அப்போதுதான் உடலை வாங்குவோம், என்று கூறியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து மணிகண்டனின் குடும்பத்தினரிடம், நெல்லை தாசில்தார் மாணிக்கவாசகம் மற்றும் மின்சார வாரிய அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதற்கிடையில் இதுதொடர்பாக சம்பவம் நடந்த இடத்தில் இருந்த மின்சார வாரியத்தைச் சேர்ந்த போர்மேன்கள் ராமகிருஷ்ணன், செந்தூர்பாண்டி ஆகிய 2 பேரையும் பணி இடைநீக்கம் செய்து மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்