பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம் ஓராண்டை கடந்தது
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான எதிர்ப்பு போராட்டம் ஓராண்டை கடந்துள்ளது. பாதுகாப்பு அளித்து ஒத்துழைப்பு நல்கும் போலீஸ் சூப்பிரண்டு சுதாகருக்கு கிராம மக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்.
சென்னை,
காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூரில் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்காக பரந்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள வளத்தூர், நெல்வாய், தண்டலம், மேல்படவூர், நாகப்பட்டு, ஏகனாபுரம், எடையார்பாக்கம், அக்கம்மாபுரம், குணகரம்பாக்கம், சிங்கில்பாடி, மகாதேவி மங்கலம் உள்ளிட்ட 13 கிராமங்களில் 4 ஆயிரத்து 791.29 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது முதல் அந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏகனாபுரம் குடியிருப்போர்கள், விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் பரந்தூர் புதிய விமான நிலையம் எதிர்ப்பு இயக்கம் சார்பில் 'வேண்டும் விவசாயம். வேண்டாம் விமான நிலையம்' என்ற முழக்கத்தை முன்வைத்து தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தற்போது இந்த போராட்டம் ஓராண்டை கடந்துள்ளது. சாமியானா பந்தல் அமைத்து, கிராம மக்கள் அமைதியாக, அறவழியில் நடத்தி வரும் போராட்டத்துக்கு காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் துறை சார்பில் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸ் சூப்பிரண்டுக்கு நன்றி
காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் போராட்டம் நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அவ்வப்போது பார்வையிட்டு செல்வது வழக்கம். அந்த வகையில் அவர் போராட்டம் நடைபெறும் பகுதியை நேற்று முன்தினம் பார்வையிட சென்றார். பின்னர் காரில் ஏறி புறப்பட தயாரானார். அப்போது போராட்டத்தில் ஒலிபெருக்கி மூலம் பேசிய நிர்வாகிகள், 'ஓராண்டு காலமாக போராட்டத்துக்கு பாதுகாப்பு வழங்கி, எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாத வகையில் அவ்வப்போது தக்க அறிவுரைகள் வழங்கி வரும் போலீஸ் சூப்பிரண்டு சுதாகருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்' என்றனர்.
அவர்களுடைய இந்த பேச்சை கேட்டவுடன் போலீஸ் சூப்பிரண்டு நெகிழ்ந்து போனார். உடனடியாக காரில் இருந்து இறங்கி போராட்ட பகுதிக்கு சென்றார்.
தங்களது போராட்டத்தை கலைப்பதற்கான முயற்சிகளை எடுக்காமல் ஒத்துழைப்பு நல்கி வருவதற்காக கிராம மக்கள் அவருக்கு கைத்தட்டி நன்றியை வெளிப்படுத்தினார்கள். அப்போது அவர்களை நோக்கி போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் கையெடுத்து வணங்கினார். இந்த காட்சி போராட்ட களத்தை உணர்ச்சிக்கரமாக்கியது.