ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விளைபொருட்களை மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் விற்று பயனடையலாம் விவசாயிகளுக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் வேண்டுகோள்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விளை பொருட்களை மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் விற்பனை செய்து பயனடையலாம் என விவசாயிகளுக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மின்னணு தேசிய வேளாண் சந்தை
இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை விற்பனைக்குழுவின் காட்டுப்பாட்டில் இயங்கும் உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சங்கராபுரம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மின்னணு தேசிய வேளாண் சந்தை (இ-நாம்) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது சின்னசேலம் விற்பனைக்கூடத்திலும் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மணலூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசால் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது.இந்த திட்டம் மூலம் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை ஆன்லைன் மூலமாக தேசிய அளவிலான சந்தையில் விற்பனை செய்ய வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது.
வர்த்தகத்தில் வெளிப்படைத்தன்மை
இத்திட்டம் தொடங்கப்பட்டு இதுவரை நாடு முழுவதும் 1000 வேளாண் விளைபொருள் விற்பனை மையங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதில் 1 கோடியே 73 லட்சம் விவசாயிகள் இணைந்துள்ளனர். விவசாயிகள் மட்டுமல்லாமல் 2 லட்சம் வர்த்தகர்களும் மின்னணு தேசிய வேளாண் சந்தை தளத்தில் பதிவு செய்துள்ளனர். இதுவரை ரூ.35 ஆயிரம் கோடி மதிப்புள்ள வேளாண் விளைபொருட்கள் மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் 2 லட்சத்து 15 ஆயிரம் விவசாயிகளும், 2,912 வர்த்தகர்களும், 98 விவசாய உற்பத்தி அமைப்புகளும் இந்த திட்டத்தின் இணைந்துள்ளனர். வேளாண் விளைபொருள் வர்த்தகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிபடுத்துவதும், அதிக அளவிலான சந்தைகளை அணுக வாய்ப்பு ஏற்படுத்தி தருவதும், அதிக அளவிலான வணிகர்களை கொள்முதலில் பங்கேற்க செய்வதும், விரைவாக மின்னணு வேளாண் சந்தை திட்டம் மூலம் பணப்பட்டுவாடா செய்யப்படுவதும், மின்னணு தேசிய வேளாண் சந்தை ஆன்லைன் பரிவர்த்தனையின் சிறப்பம்சங்கள் ஆகும்.
நல்ல விலை கிடைக்கும்
மின்னணு தேசிய வேளாண் சந்தை இக்பார்ம்கேட் முறையில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை இருப்பிடத்தில் இருந்து விற்பனை செய்யவும் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டில் 127 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. வரத்து வரப்பெறும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ஒரே நேரத்தில் ஆன்லைன் மூலம் மறைமுக ஏலம் நடத்தப்பட்டு வியாபாரிகள் தங்களின் செல்போன் மூலம் விலை நிர்ணயம் செய்யும் முறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிக போட்டி ஏற்படுத்தப்பட்டு விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த ஒற்றை உரிமம் பெற்றுள்ள வணிகர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கொள்முதல் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் விற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.