எழும்பூர் அருங்காட்சியகத்தில் காந்தி உருவச்சிலை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

75-வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காந்தி உருவச்சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Update: 2022-08-16 00:05 GMT

சென்னை,

காந்தியடிகள் தமிழ்நாட்டில் மேலாடை துறந்து எளியவர்களை போல அரை ஆடை உடுத்திய நூற்றாண்டு நினைவாகவும், 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவை சிறப்பிக்கின்ற வகையிலும் சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் காந்தியடிகளின் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு காந்தி உருவச்சிலையை 'ரிமோட் கண்ட்ரோல்' மூலம் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து காந்தி சிலை அருகே வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

கண்காட்சி அரங்கு

பின்னர் 'விடுதலை போரில் தமிழகம்' என்ற காணொலி ஒளிபரப்பப்பட்டது. விடுதலை போரில் தமிழர்களின் பங்களிப்பு குறித்தும், சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றபோது நடந்த நிகழ்வுகள் குறித்த தியாகிகளின் நினைவலைகளும் காணொலி மூலம் விளக்கப்பட்டது. இதனை மு.க.ஸ்டாலின் ரசித்து பார்த்தார்.

இதைத்தொடர்ந்து 'விடுதலை போரில் தமிழகம்' என்ற கண்காட்சி அரங்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த கண்காட்சியில் இந்திய விடுதலைப்போரில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து நாளிதழ்களில் வெளிவந்த புகைப்படங்கள், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளின் வாழ்க்கை வரலாறு, சுதந்திர போரின்போது எடுக்கப்பட்ட மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, வேலு நாச்சியார், வ.உ.சி, பாரதியார் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.

வாள்-பீரங்கி குண்டு

சுதந்திர போராட்ட தியாகிகளை சிறப்பிக்கும் நாணயங்கள், தபால் தலைகள், வீரபாண்டிய கட்டபொம்மன் பயன்படுத்திய வாள், சுருள்வாள், பீரங்கி குண்டு ஆகியவையும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

பெண்கள் 1931-ம் ஆண்டுகளிலேயே வெகுண்டு எழுந்திருப்பதை எல்லாம் இந்த கண்காட்சி மூலம் பார்க்க முடிகிறது.

ரசித்து பார்த்தார்

தமிழகத்துக்கு 20 முறை வருகை தந்த காந்தியடிகளின் வரலாற்று நிகழ்வுகளை எடுத்துக்கூறும் புகைப்படங்களில், இதுவரை அறியப்படாத தியாகிகளின் புகைப்படங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இதனையும் மு.க. ஸ்டாலின் ரசித்து பார்த்தார்.

விழாவில் துரைமுருகன், எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, மு.பெ.சாமிநாதன், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்கள், தயாநிதிமாறன் எம்.பி., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் டாக்டர் சந்திரமோகன், சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை முதன்மை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் வீ.ப.ஜெயசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்