முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு அட்டை கேட்டு நோயாளிகளை வற்புறுத்தவில்லை

முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு அட்டை கேட்டு நோயாளிகளை வற்புறுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Update: 2023-06-22 20:55 GMT

காப்பீட்டு அட்டை

தனியார் மருத்துவமனைகளில் ஏழை, எளிய மக்கள் உயர் மருத்துவ சிகிச்சை பெறுவது என்பது எட்டாக்கனியாக இருந்தது. இதை தவிர்த்து, அனைவருக்கும் உயர் மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வகையில் மாநில அரசால் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம், மத்திய அரசால் பிரதமர் காப்பீட்டு திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேநேரம் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் தனியார் மருத்துவமனைக்கு நிகராக உயர் மருத்துவ சிகிச்சை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் சமீப காலமாக தனியார் மருத்துவமனையில் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வது போல் அரசு ஆஸ்பத்திரிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், அவசர மருத்துவ சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் காப்பீட்டு அட்டை கேட்டும், அதை கொடுத்த பின்னர் காப்பீட்டுக்கு விண்ணப்பித்து, அதற்கு ஒப்புதல் வரும் வரையும் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் காலதாமதம் செய்வதாக புகார் எழுந்தது. இதனால் காப்பீடு அட்டை இல்லாத நோயாளிகளின் உறவினர்கள் காப்பீடு அட்டைக்காக அரசு அலுவலகங்களுக்கு அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு

இதன்காரணமாக சிகிச்சைக்கு காலதாமதம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உண்டாகி உள்ளதாகவும், இது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் சரத்து 21 குடிமக்களுக்கான வாழ்வதற்கான உரிமை மறுக்கப்படுவதாகவும், எனவே திருச்சி மாவட்டத்தில் உள்ள தலைமை மருத்துவமனைகளில் மருத்துவ காப்பீடு அட்டை இல்லாமல் நோயாளிகளுக்கு உரிய அறுவை சிகிச்சை அளிக்க உத்தரவிடவும், காப்பீடு அட்டை வைத்துள்ளவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் உடனடி சிகிச்சை அளிக்க உத்தரவிடவும் கோரி திருச்சி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் திருச்சி கண்டோன்மெண்ட் வில்லியம்ஸ் சாலையை சேர்ந்த வக்கீல் எஸ்.மாரியப்பன் வழக்கு தொடர்ந்தார்.

அதில் எதிர் மனுதாரராக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு ஆஸ்பத்திரி டீனை சேர்த்து இருந்தார். இந்த வழக்கு திருச்சி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவரும், மாவட்ட நீதிபதியுமான எஸ்.ஜெயசிங், உறுப்பினர் கே.ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வற்புறுத்துவதில்லை

விசாரணையின் போது, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் அரசு அறிவுரைப்படி செயல்படுத்தப்படுவதாகவும், அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் வழங்கப்படுவது போல், இலவச மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. யாரிடமும் மருத்துவ காப்பீட்டு அட்டை கொண்டுவரும்படி வற்புறுத்துவதில்லை என்று டீன் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தார். இதைத்தொடா்ந்து இந்த வழக்கில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த வழக்கை நீதிபதி நேற்று முடித்து வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்