கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதே முதன்மை நோக்கம்
அரசின் நலத்திட்டங்களை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதே முதன்மை நோக்கம் என திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறினார்.
சிறப்பு பேட்டி
சென்னை தலைமை செயலகத்தில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தினத்தந்திக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கூறியதாவது:-
பயனுள்ளதாக இருந்தது
சென்னையில் நடந்த மாநாட்டில் பல்வேறு திட்டங்கள் மாவட்டத்தில் செயல்படுத்துவது குறித்தும், எந்தந்த திட்டங்களை விரைந்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார். இந்த மாநாடு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மக்கள் நல பணிகளில் எந்தவிதமான தாமதமும் இல்லாமல் விரைந்து முடிக்க வேண்டும். இதற்கு அனைத்துத்துறை அதிகாரிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மக்களுக்கு தேவையான வசதிகளை உடனுக்குடன் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் நலனில் அதிக அக்கறை காட்ட வேண்டும். மழைக்காலத்திற்கு முன்பாக அனைத்து கட்டுமான பணிகளையும் விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு விரைவாக வங்கிக் கடன் பெற்றுத்தந்து அவர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முதன்மை நோக்கம்
அரசின் நலத்திட்டங்களை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதுதான் அரசின் முதன்மை நோக்கம். இதனை செயல்படுத்த அனைத்து விதமான நடவடிக்கையும் எடுக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் திருப்பத்தூர் மாவட்டம் முதன்மையாக உள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் நாம் பின்தங்கி இருந்தோம். தற்போது அதை முன்னேற்றி கொண்டு வந்துள்ளோம். ஆண், பெண் குழந்தைகள் இரண்டும் சமம், பெண் குழந்தைகளை வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,500 பண்ணைக்குட்டைகள் வெட்டப்பட்டு உலக சாதனை படைக்கப்பட்டது. இதன் மூலம் அனைத்து பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.
அங்கன்வாடி திட்டத்தில் நல்ல முன்னேற்றம் கண்டு உள்ளோம். 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடிகளில் குடிநீர், கழிப்பறை வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. ஏராளமான அங்கன்வாடி கட்டிடங்கள் வர்ணங்கள் பூசி, சீரமைக்கப்பட்டுள்ளது. மலைவாழ் மக்களுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.
வங்கிக்கடன்
திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிக அளவு வழங்கப்படும் வங்கிக் கடனை பொதுமக்கள் பெற்று தங்களது வாழ்க்கை தரத்தினை முன்னேற்றி கொள்ளலாம். அரசின் நலத்திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி தங்களை முன்னேற்றிக்கொள்ள வேண்டும். தற்போது மழைக்காலம் என்பதால் குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு காய்ச்சல் ஏற்படுகிறது. பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனே அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தை தமிழ்நாட்டில் முதன்மை மாவட்டமாக மாற்ற அதிகாரிகளும், பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.