கடையநல்லூர் காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி

கடையநல்லூர் காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ.4-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Update: 2023-04-03 18:45 GMT

கடையநல்லூர்:

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளான பொய்கை, கள்ளம்புளி, போகநல்லூர், காசிதர்மம், கொடிக்குறிச்சி, ஆய்க்குடி, சாம்பவர் வடகரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இங்கு அறுவடை செய்யப்படும் தக்காளியை விவசாயிகள் சுரண்டை, சாம்பவர் வடகரை, கடையநல்லூர் காய்கறி மார்க்கெட்டுகளுக்கும் கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள். அதனை வியாபாரிகள் வாங்கி தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும், கேரளாவிற்கும் அனுப்பி வைக்கிறார்கள்.

கடையநல்லூர் மார்க்கெட்டில் கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ.15 வரை விற்பனையானது. இந்த நிலையில் நேற்று கடையநல்லூர் மற்றும் சுரண்டை மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்து காணப்பட்டது. வரத்து அதிகரிப்பால் தொடர்ந்து விலை சரிந்தது. இதனால் 30 கிலோ கொண்ட ஒரு பெட்டி ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனையானது. அதாவது ஒரு கிலோ தக்காளி ரூ.4-க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை குறைந்ததால் தக்காளி சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு போதிய அளவுக்கு விலை கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து வியாபாரி சீதாராமன் கூறியதாவது:-

தற்போது ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தக்காளி உற்பத்தி அதிகமாக இருக்கிறது. அங்கிருந்தும் தமிழகத்துக்கு அதிகளவில் தக்காளி கொண்டு வரப்படுகிறது. மேலும் தக்காளி விளைச்சலும் அமோகமாக இருப்பதால் கடந்த சில வாரங்களாக கடையநல்லூர் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து விலைவீழ்ச்சி அடைந்துள்ளது. மொத்த மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.4-க்கு விற்றாலும், சில்லறை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.15 முதல் ரூ.20 வரை விற்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தக்காளி விலை சரிவு குறித்து விவசாயிகள் முருகய்யா, சுப்புராஜ் ஆகியோர் கூறியதாவது:- நாங்கள் சாகுபடி செய்துள்ள தக்காளியை பறித்து கடையநல்லூர் மார்க்கெட்டுக்கு கொண்டு வருகிறோம். கடந்த சில நாட்களாக தொடர்ந்து தக்காளி விலை சரிந்து வருகிறது. நேற்றைய மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.4 வரை மட்டுமே ஏலம் போனது. ஒரு ஏக்கர் தக்காளி சாகுபடி செய்ய கூலி, மருந்து என சுமார் ரூ.25 ஆயிரம் செலவு ஆகிறது. ஏக்கருக்கு 15 பெட்டி வீதம் 400 கிலோ தக்காளி பறிக்கப்படுகிறது.  தக்காளி விலை குறைந்துள்ளதால் தக்காளி பறிப்பவர்களுக்கு கூலி கூட கொடுக்க முடியாத நிலை உள்ளது. மேலும் செடியை பராமரிக்க அதிக செலவு ஏற்படுகிறது. நகராட்சி குத்தகை கட்டணம், வியாபாரிகள் விற்பனை கமிஷன் இவைகள் எல்லாம் போக 25 கிலோ ஒரு பெட்டி தக்காளிக்கு, விவசாயிகளுக்கு நூறு ரூபாய் மட்டுமே கிடைக்கிறது.

இதனால் சில விவசாயிகள் தக்காளியை பறிக்காமல் அப்படியே போட்டுள்ளனர். இதனை கால்நடைகள் மேயும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தக்காளியை அழித்துவிட்டு அதற்கு மாற்று விவசாயமாக வாழையை பயிரிட உள்ளோம். தமிழக அரசு கடையநல்லூர் நகராட்சி பகுதியில் விவசாய விளை பொருட்களை நேரடியாக விற்கிற விதத்தில் உழவர் சந்தை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்