கன்னிவாடி சந்தையில் ஆடுகளின் விலை உயர்ந்தது.
ஆடுகள் வரத்து குறைவால் கன்னிவாடி சந்தையில் ஆடுகளின் விலை உயர்ந்தது.
மூலனூர்
ஆடுகள் வரத்து குறைவால் கன்னிவாடி சந்தையில் ஆடுகளின் விலை உயர்ந்தது.
கன்னிவாடி சந்தை
தமிழகத்தில் நடைபெறும் பெரிய ஆட்டு சந்தைகளில் கன்னிவாடி ஆட்டுச்சந்தை ஒன்றாகும். இந்த சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு கோவை, பொள்ளாச்சி, உடுமலை, மதுரை, திருச்சி, சென்னை போன்ற தமிழகத்தின் பெருநகரங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் கன்னிவாடி ஆட்டுச் சந்தையில் வந்து ஆடுகளை வாங்கி செல்கின்றனர்.
அதேபோல் கன்னிவாடி மற்றும் மூலனூர், வெள்ளகோவில், பரமத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். சமீபகாலமாக இப்பகுதியில் நல்ல மழை பெய்துள்ளதால் ஆடுகளுக்கு நல்ல தீனி இருப்பதால் விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்க முன்வருவதில்லை
வரத்து குறைவால் விலை உயர்வு
இதனால் கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு கடந்த 3 வாரங்களாக ஆடுகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி விவசாயி ஒருவர் கூறியதாவது:-
தற்போது கன்னிவாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கிணறுகளில் போதிய அளவு தண்ணீர் உள்ளது. மேலும் கால்நடைகளுக்கு தேவையான தீனிகள் போதிய அளவில் இருப்பதால் விவசாயிகள் ஆடுகள் வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ஆடுகளை விற்க விவசாயிகள் ஆர்வம் இல்லாததால் கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்துள்ளது.
இவ்வாறு கூறினார்.
இந்த சந்தையில் ஆடுகளின் விலை அதன் எடையை பொறுத்தே நிர்ணயிக்கப்படும். அதன் அடிப்படையில் கடந்த வாரத்தில் ஒரு கிலோ ரூ.650-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரத்தில் ரூ.100 அதிகரித்து ரூ.750-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் 10 கிலோ எடை கொண்ட ஆடு சுமார் ரூ.7,500-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன.
---