பூக்கள் விலை கிடு, கிடு உயர்வு

முகூர்த்தநாள், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்கள் விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது. மணப்பாறையில் ஒரு கிலோ மல்லிகை ரூ.1,500-க்கு விற்பனையாகி உள்ளது.

Update: 2023-09-16 19:30 GMT

முகூர்த்தநாள், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்கள் விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது. மணப்பாறையில் ஒரு கிலோ மல்லிகை ரூ.1,500-க்கு விற்பனையாகி உள்ளது.

பூக்கள் விலை உயர்வு

முகூர்த்தநாள், பண்டிகை நாட்கள் வந்துவிட்டால் பூக்கள், காய்கறிகள் விலை உயர்வது வாடிக்கை. இந்தநிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆவணி மாதத்தின் கடைசி முகூர்த்த நாள் என்பதாலும், நாளை (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி என்பதாலும் பூக்கள் விலை கிடு, கிடுவென உயர்ந்தது.

மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான புதுப்பட்டி, கல்பாளையத்தான்பட்டி, அமயபுரம், கூடத்திப்பட்டி, பூலாம்பட்டி, அணைக்கரைப்பட்டி, வையம்பட்டி, அழககவுண்டம்பட்டி, கருப்பூர், நடுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூ விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

ரூ.1,500 முதல் ரூ.2 ஆயிரம் வரை

இப்பகுதிகளில் விளைவிக்கப்படும் பூக்கள் மணப்பாறை பஸ் நிலையம் அருகில் உள்ள பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இங்கிருந்து திருச்சி, கும்பகோணம், சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் பூக்கள் அனுப்பிவைக்கப்படுகின்றன.

முகூர்த்தநாள், விநாயகர்சதுர்த்தியையொட்டி நேற்று மணப்பாறை பூ மார்க்கெட்டில் பூக்களை வாங்க அதிகளவில் வியாபாரிகள் வருகை தந்தனர். இதனால் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று ரூ.800 வரை விற்பைனயான மல்லிகை பூ கிலோ ரூ.1,500 முதல் ரூ.2 ஆயிரம் வரையும், ரூ.400-க்கு விற்பனையான முல்லைப்பூ ரூ.800 முதல் ரூ.1,000 வரையிலும், ரூ.300-க்கு விற்பனையான ஜாதிப்பூ மற்றும் சம்பங்கி பூ ரூ.500 முதல் ரூ.800 வரையும், ரூ.50-க்கு விற்ற பிச்சு ரூ.100-க்கும், ரூ.30-க்கு விற்ற கேந்தி ரூ.50- க்கும், ரூ.200-க்கு விற்பனையான கனகாம்பரம் ரூ.800-க்கும் விற்பனையானது. இதனால் பூ விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஸ்ரீரங்கம்

திருச்சி ஸ்ரீரங்கம் பூமார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ மல்லிகை, முல்லை பூ ரூ.1,000 வரை விற்கப்பட்டது. கடந்தவாரம் இவை ரூ.300 முதல் 400 வரையே விற்கப்பட்டன.

இதுபோல் கனகாம்பரம், சாதிப்பூ ரூ.900-க்கும், சம்பங்கி ரூ.500-க்கும், அரளி ரூ.400-க்கும், விற்கப்பட்டது. ரோஜா, விருட்சி, ரூ.100 முதல் 200-க்கும், கோழிக்கொண்டை, கேந்தி- ரூ.20 முதல்40-க்கும் விற்கப்பட்டது. இந்த விலை உயர்வு 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்