வரத்து அதிகரிப்பால் நாட்டுக்கோழி விலை குறைந்தது
பரமத்திவேலூர் சந்தையில் வரத்து அதிகரித்ததால் நாட்டுக்கோழி விலை குறைந்துள்ளது.
பரமத்திவேலூர்
நாட்டுக்கோழி சந்தை
பரமத்திவேலூரில் ஞாயிற்றுக்கிழமைதோறும் நாட்டுக்கோழி சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு பரமத்தி வேலூர், மோகனூர், கரூர், பாளையம் நாமக்கல், ஜேடர்பாளையம், சோழசிராமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நாட்டுக்கோழிகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கொண்டு வருகின்றனர்.
நேற்று நடைபெற்ற சந்தைக்கு பெருவடை, கீரி, கடகநாத், அசில், மயில் காகம், கருங்கண் கருங்காலி, கிரிராஜா உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டுக்கோழிகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கொண்டு வந்திருந்தனர்.
விலை குறைந்தது
இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும் நாட்டுக்கோழிகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்து நாட்டுக்கோழிகளை வாங்கிச் செல்கின்றனர்.
தரமான நாட்டுக்கோழிகள் கடந்த வாரம் கிலோ ஒன்று ரூ.400 வரையிலும், பண்ணைகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகள் கிலோ ரூ.300 வரையிலும் விற்பனையானது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் நாட்டுக்கோழிகள் கிலோ ரூ.300 வரையிலும், பண்ணை நாட்டுக்கோழிகள் ரூ.250 வரையிலும் விற்பனையானது. சண்டைக்கோழிகள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனையானது. வரத்து அதிகரித்ததாலும், சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றதாலும் நாட்டுக்கோழி விலை குறைந்துள்ளது.