முதுகுளத்தூர் யூனியன் தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது

அ.தி.மு.க. எம்.பி. தர்மர் வகித்த பதவியான முதுகுளத்தூர் யூனியன் தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது

Update: 2022-09-23 19:01 GMT

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் யூனியனில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 4 இடங்களில் அ.தி.மு.க.வும், 4 இடங்களில் தி.மு.க.வும், 7 இடங்களில் சுயேச்சையும் வெற்றி பெற்று இருந்தன. 11-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலரும், யூனியன் தலைவராகவும் பதவி வகித்த தர்மர் கடந்த மே மாதம் 30-ந்தேதி அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இதனால் அவர் யூனியன் தலைவர் பதவியையும், கவுன்சிலர் பதவியையும் ராஜினாமா செய்தார். இதையடுத்து 11-வது வார்டு காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் முதுகுளத்தூர் யூனியன் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலுக்காக வந்திருந்த கவுன்சிலர்களை சோதனையிட்ட பின்பே போலீசார் அனுமதித்தனர். அப்போது பெண் கவுன்சிலர் ஒருவர் துணிக்கு போடும் சொட்டு நீலம் வைத்திருப்பதை அறிந்து அதனை பறிமுதல் செய்தனர்.

இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சண்முகப்பிரியா ராஜேஷ் 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து 3-வது வார்டு தி.மு.க. கவுன்சிலரான நாகஜோதி ராமர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால், அவர் 5 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். 1 வாக்கு செல்லாததாக அறிவிக்கப்பட்டது. மேலும் வெற்றி அறிவிப்பை தேர்தல் அதிகாரிகள் தாமதமாக்கியதாக கூறி தி.மு.க.வினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தேர்தல் அதிகாரி மாடசாமி, வெற்றிக்கான சான்றிதழை சண்முகப்பிரியாவுக்கு வழங்கினார். இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் யாரும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தேர்தலையொட்டி துணை சூப்பிரண்டு சின்னகண்ணு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தி.மு.க. மாவட்ட பொறுப்பாளரும், ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், சண்முகப்பிரியாவை வாழ்த்தினார். ஆணையாளர்கள் ரவி, அன்புகண்ணன் உள்பட அதிகாரிகளும் வாழ்த்து தெரிவித்தனர். அ.தி.மு.க. வசம் இருந்த முதுகுளத்தூர் ஒன்றிய குழு தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்