வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைப்பு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைப்பு கூட்டம் கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடந்தது.
திருவள்ளூர்,
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும், சென்னை தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மை செயலர் அறிவுரைபடியும் நகர்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் ஆயிரத்து 500 வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளை மறுசீரமைப்பு செய்து வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 3 ஆயிரத்து 657 முதன்மை வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்காளர்களை தணிக்கை செய்து புதியதாக 7 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டு மொத்தம் 3 ஆயிரத்து 664 வாக்குச்சாவடிக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலில் சேர்க்கப்பட்டது.
இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியல் சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு அலுவலர்களின் அலுவலகங்களான வருவாய் கோட்ட அலுவலகம், மண்டல அலுவலகம் மற்றும் உதவி வாக்குப்பதிவு அலுவலகங்களான வட்டாட்சியர், நகராட்சி ஆணையர் அலுவலகங்களில் விளம்பரப் பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே அரசியல் கட்சிகள், பொதுமக்கள், எவருக்கேனும் ஆட்சேபனை அல்லது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனில் தங்களது எழுத்துப்பூர்வமான கடிதங்களை வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோருக்கு வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிட்ட 7 தினங்களுக்குள் அளிக்குமாறு கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.