பொள்ளாச்சி மாட்டு சந்தை களைகட்டியது
பொள்ளாச்சி மாட்டு சந்தை நேற்று களைகட்டியது. ரூ.5 கோடிக்கு வர்த்தகம் ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி மாட்டு சந்தை நேற்று களைகட்டியது. ரூ.5 கோடிக்கு வர்த்தகம் ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
மாட்டு சந்தை
பொள்ளாச்சியில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று செவ்வாய்கிழமை என்பதால் மாட்டு சந்தை நடைபெற்றது. ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகள் விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வரப்பட்டது.
மேலும் மாடுகளை வாங்குவதற்கு அதிகளவு வியாபாரிகளும் வந்திருந்தனர். கொட்டும் மழையிலும் மாடுகளை வியாபாரிகள் வாங்கி சென்றனர். இதற்கிடையில் மழையின் காரணமாக சந்தை சேறும், சகதியுமாக காணப்பட்டது. இதனால் வியாபாரிகள் கடும் சிரமப்பட்டனர்.
இதுகுறித்து மாட்டு வியாபாரிகள் கூறியதாவது:-
வரத்து அதிகரிப்பு
பொள்ளாச்சியில் இருந்து பெரும்பாலும் கேரளாவுக்கு மாடுகள் இறைச்சி பயன்பாட்டிற்கு தான் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் பக்ரீத் பண்டிகை 10-ந்தேதி கொண்டாடப்படுவதால் சந்தைக்கு அதிகமாக மாடுகள் கொண்டு வரப்பட்டன. சுமார் 3500 மாடுகள் வந்திருந்தன. வழக்கத்தை விட கூடுதலாக வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி சென்றனர். கடந்த வாரத்தை விட 1500 மாடுகள் அதிகமாக வந்திருந்தன. நாட்டு காளை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும், பசு ரூ.45 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையும், நாட்டு எருமை ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும், மொரா ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும், செர்சி ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது. வரத்து அதிகரித்தும் மாடுகள் விலை குறையவில்லை. நேற்று மட்டும் ரூ.5 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.