பஸ் நிறுத்தங்களை மாற்றி அமைத்த போலீசார்
வடமதுரையில், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பஸ் நிறுத்தங்களை போலீசார் மாற்றி அமைத்தனர்.;
வடமதுரையில் பஸ் நிலையம் இல்லை. இதனால் திருச்சி, திண்டுக்கல், வேடசந்தூர் செல்லும் பஸ்கள் அனைத்தும் தேரடி பஸ் நிறுத்தம் அருகே நின்று பயணிகளை இறக்கிவிட்டு ஏற்றிச்செல்லும். ஒரே நேரத்தில் திண்டுக்கல் மற்றும் திருச்சி செல்லும் பஸ்கள் எதிர் எதிர் திசைகளில் நிறுத்தப்படும்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் பஸ்கள் புறப்படும் வரை, எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதைக்கருத்தில் கொண்டு வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் உத்தரவின்பேரில், வடமதுரை பஸ் நிறுத்தத்தில் போலீசார் மாற்றம் செய்தனர். அதன்படி திருச்சி, வேடசந்தூர் செல்லும் பஸ்களை தேரடி அருகே நிறுத்தவும், திண்டுக்கல் செல்லும் பஸ்களை மூன்று சாலை சந்திப்பு அருகே நிறுத்தவும் பஸ் டிரைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் பஸ் நிறுத்தம் தொடர்பாக, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் விரைவில் அறிவிப்பு பலகை வைக்கப்பட உள்ளது. பஸ் நிறுத்தத்தை மாற்றி அமைத்ததன் எதிரொலியாக, தற்போது வடமதுரையில் போக்குவரத்து நெரிசல் குறைந்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இருப்பினும், வடமதுரையில் பஸ் நிலையம் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.