வழக்கு விசாரணைக்கு சென்ற போலீசாருக்கு கொலை மிரட்டல்

களக்காடு அருகே வழக்கு விசாரணைக்கு சென்ற போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 10-க்கும் மேற்பட்ட பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-15 21:25 GMT

களக்காடு:

களக்காடு அருகே வழக்கு விசாரணைக்கு சென்ற போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 10-க்கும் மேற்பட்ட பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

வாக்குவாதம்

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழப்பத்தை வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லப்பாண்டி மகன் பெருமாள் சாமி (வயது 25). இவர் நேற்று தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் குடில் தெரு வழியாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த வசந்த் (25), கிஷோர் (24), அரவிந்த் (23), மதன், தீபக், இளையராஜா, சுர்ஜித், ஆனந்த் உள்பட 9 பேர் பெருமாள் சாமியை வழிமறித்து எங்கள் ஊர் வழியாக வேகமாக செல்வதா? எனக் கேட்டனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

வாலிபர் மீது தாக்குதல்

தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த வசந்த் உள்பட 9 பேரும் சேர்ந்து பெருமாள் சாமியை கற்களால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதில் காயமடைந்த அவர், நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்தார்.

இதனைதொடர்ந்து மற்றொரு சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி மற்றும் போலீசார் விசாரணைக்காக குடில் தெருவிற்கு ஜீப்பில் சென்றனர்.

போலீசாருக்கு கொலை மிரட்டல்

இதை பார்த்ததும் அங்கு நின்று கொண்டிருந்த அர்ஜூனன் என்பவருடன் குடில் தெருவை சேர்ந்த பெண்கள் சேர்ந்து போலீஸ் ஜீப்பை வழிமறித்தனர். ஊருக்குள் செல்லக்கூடாது என்று ஜீப் முன்பு அமர்ந்தனர்.

அப்போது அர்ஜூனன், போலீசாரை பார்த்து ஊரை விட்டு வெளியே செல்லுங்கள், இல்லையெனில் ஒருவரும் உயிருடன் செல்ல முடியாது என்று கல்லை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் வேறு வழியின்றி திரும்பிச் சென்றனர்.

6 பேர் கைது

இதுபற்றி சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி அளித்த புகாரின் பேரில் அர்ஜூனன் மற்றும் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் மீது போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் வழக்குப்பதிவு செய்தார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி அர்ஜூனனை கைது செய்தனர்.

மேலும் பெருமாள்சாமியை தாக்கிய வழக்கில் வசந்த், முகில் வாணன், கிஷோர், அரவிந்த், சுர்ஜித் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்