மகனிடம் இருந்து நகை பணத்தை பெற்று மூதாட்டியிடம் வழங்கிய போலீசார்
நெய்வேலியில் மகனிடம் இருந்து நகை பணத்தை பெற்று மூதாட்டியிடம் போலீசார் வழங்கினா்.
நெய்வேலி:
நெய்வேலி 18-வது வட்டத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி மனைவி தனலட்சுமி (வயது 75). இவர் ஹலோ சீனியர் காவல் உதவி எண்ணை தொடர்பு கொண்டு, தன்னுடைய கணவரின் ஓய்வூதிய பணம் ரூ.1 லட்சம், 2 பவுன் நகை, வீட்டு மனை பத்திரம் ஆகியவற்றை தனது மூத்த மகன் வாங்கி வைத்துக்கொண்டு தர மறுப்பதாக புகார் தெரிவித்தார். இது பற்றி அறிந்ததும் நெய்வேலி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயதேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். விசாரணையில், அவரது மகன் நகை, பணம், வீட்டு மனை பத்திரத்தை எடுத்து வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, அவரிடம் இருந்து நகை, பணம், வீட்டு மனை பத்திரத்தை பெற்று மூதாட்டி தனலட்சுமியிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசாருக்கு மூதாட்டி நன்றி தெரிவித்தார்.