ரதயாத்திரையை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

களியக்காவிளையில் அயோத்தியில் இருந்து புறப்பட்டு வந்த ரத யாத்திரையில் காவிக் கொடியுடன் மோட்டார் சைக்கிள் பேரணியாக செல்ல அனுமதி மறுத்து போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-11-13 20:16 GMT

களியக்காவிளை, 

களியக்காவிளையில் அயோத்தியில் இருந்து புறப்பட்டு வந்த ரத யாத்திரையில் காவிக் கொடியுடன் மோட்டார் சைக்கிள் பேரணியாக செல்ல அனுமதி மறுத்து போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ரத யாத்திரை

நாட்டின் பெயரை பாரதம் என மாற்ற வேண்டும். பள்ளி, கல்லூரி பாட புத்தகத்தில் நாட்டின் உண்மையான வரலாறுகளை சேர்க்க வேண்டும். பள்ளி பாடத் திட்டத்தில் ராமாயணத்ைத சேர்க்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கேரள மாநிலம் செங்கோட்டுகோணம் ஆஸ்ரமம் சக்தி சாந்தானந்த மகரிஷி தலைமையில் கடந்த மாதம் 5-ந் தேதி அயோத்தியில் இருந்து ராமர் ரத யாத்திரை தொடங்கியது. இந்த ரத யாத்திரையை உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ெதாடங்கி வைத்தார்.

இந்த யாத்திரை நேபாளம், ஹரித்துவார், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், கோவா, கர்நாடகம், கேரளம் வழியாக நேற்று தமிழக எல்லை பகுதியான களியக்காவிளை வந்தது.

வரவேற்பு

மாவட்ட எல்லையில் வெள்ளிமலை சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் தலைமையில் களியக்காவிளை பத்ரகாளி அம்மன் கோவில், மேக்கோடு இசக்கியம்மன் கோவில், மீனச்சல் கிருஷ்ணசாமி கோவில், சாஸ்தான்குளம், மிண்ணங்கோடு, கஞ்சிக்குழி கோவில் சமயவகுப்பு மாணவர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட சமய வகுப்பு அமைப்பாளர் ஆர்.கே. ராமச்சந்திரன், மேல்புறம் ஒன்றிய அமைப்பாளர் ஏ.சுரேந்திரகுமார், துணை அமைப்பாளர் ஆர். அஜயன், இந்து கோவில் கூட்டமைப்பு மாநில பொறுப்பாளர் டாக்டர் தெய்வபிரகாஷ், களியக்காவிளை பேரூராட்சி கவுன்சிலர் உமா மகேஸ்வரி, மாவட்ட கவுன்சிலர் ராஜேஷ்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேரணிக்கு தடை

தொடர்ந்து ரதயாத்திரை கன்னியாகுமரிக்கு புறப்பட தயாரானது. அப்போது ரதத்தின் முன்பு இருசக்கர வாகனத்தில் காவிக் கொடியுடன் இளைஞர்கள் பேரணி செல்ல முயன்றனர். இதற்கு கன்னியாகுமரி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் மற்றும் தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சுந்தர மாணிக்கம் தலைமையிலான போலீசார் அனுமதி மறுத்தனர்.

இதனால் பேரணியில் கலந்து கொண்ட தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இதையடுத்து அங்கு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் அங்கு பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.

தொடர்ந்து வெள்ளிமலை ஆஸ்ரம சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் தொண்டர்களை சமாதானப்படுத்தி அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் காவிக் கொடியுடன் மோட்டார் சைக்கிள் பேரணி இல்லாமல் ரதயாத்திரை செல்ல போலீசார் அனுமதி அளித்தனர். இதையடுத்து ரதயாத்திரை கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டு சென்றது.

கொட்டாரம் ராமர் கோவில் முன் ரதயாத்திரைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பா.ஜனதா, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் ரதயாத்திரை அங்கிருந்து புறப்பட்டு கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா வந்தது.

மதுரைக்கு செல்கிறது

இந்த ரத யாத்திரை கன்னியாகுமரியில் இருந்து இன்று (திங்கட்கிழமை) மதுரைக்கு புறப்பட்டு செல்கிறது. அடுத்தமாதம் (டிசம்பர்) 3-ந் தேதி சிறப்பு யாகத்துடன் காசியில் ரத யாத்திரை நிறைவடைவதாக செங்கோட்டுகோணம் ஆஸ்ரமம் சக்தி சாந்தானந்த மகரிஷி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்