போலீஸ் நிலையத்தில் இறந்த வாலிபரின் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் - போலீஸ் கமிஷனருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு

போலீஸ் நிலையத்தில் இறந்த வாலிபரின் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.

Update: 2022-06-16 03:13 GMT

சென்னை செங்குன்றத்தை அடுத்த அலமாதி வேட்டைக்காரன் பாளையத்தை சேர்ந்த ராஜசேகர் (வயது 31) என்பவரை கொடுங்கையூர் போலீசார், திருட்டு வழக்கு தொடர்பான விசாரணைக்காக அழைத்து சென்றனர். இந்த நிலையில் கொடுங்கையூர் போலீஸ் நிலையத்தில் ராஜசேகர் மர்மமான முறையில் இறந்தார். போலீசார் தாக்கியதில் தான் ராஜசேகர் இறந்துபோனதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர். இந்த விவகாரம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர்பொன்ராஜ் உள்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், ராஜசேகரின் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்கவும், தனது குடும்பத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதால் உரிய பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட வேண்டும் என்று ராஜசேகரின் தாயார் உஷாராணி மற்றும் குடும்பத்தினர் மாநில மனித உரிமை ஆணையத்தில் நேரில் ஆஜராகி மனு அளித்தனர்.

மனுவை விசாரித்த ஆணையத்தின் தலைவர் பாஸ்கரன், 'மனுதாரர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சென்னை நகர போலீஸ் கமிஷனர் உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை கெல்லீஸ் பகுதியில் உள்ள அரசு இல்லத்தில் தற்காலிகமாக தங்க வைத்து பாதுகாப்பு வழங்கலாம். ராஜசேகரின் பிரேத பரிசோதனை அறிக்கை தயாரானதும் மனுதாரருக்கு வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்