விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்

விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் சப்-கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2023-09-16 21:45 GMT

பொள்ளாச்சி

விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் சப்-கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

ஆலோசனை கூட்டம்

விநாயகர் சதுர்த்தி விழா நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இந்து அமைப்புகள், பொதுமக்கள் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவது வழக்கம்.

பின்னர் அந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று ஆற்றில் கரைக்கப்படும். இந்த நிலையில் ஊர்வலத்தையொட்டி எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதற்கு சப்-கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, சிலைகளை கரைக்கும் இடங்களில் போதிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஊர்வல பாதையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசினார். இதில் நேர்முக உதவியாளர் அரசகுமார், தாசில்தார்கள் ரேணுகாதேவி, அருள்முருகன், வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சிங்காரவேலன், இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் ஊர்க்காவல் படையினர், அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டம் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

வாகனங்களின் ஆவணங்கள் சரிபார்த்தல்

ஆனைமலையில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை), 20-ந்தேதியும், பொள்ளாச்சியில் 20, 21-ந்தேதிகளிலும், வால்பாறையில் 24-ந்தேதியும் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நடைபெறுகிறது. ஊர்வலம் தொடங்கும் இடத்தில் இருந்து முடியும் இடம் வரை தாசில்தார்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர்ஆய்வு செய்து சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சிலையை கரைக்கும் இடத்தில் அந்தந்த ஊராட்சி, பேரூராட்சி நிர்வாகத்தினர் புதர்களை அகற்றுதல், மின் விளக்கு அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்ய வேண்டும். சிலை கரைக்கும் பகுதியில் தீயணைப்பு துறையினர், 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தி வைக்க வேண்டும். ஊர்வல பாதையில் தாழ்வாக மின் கம்பிகள் சென்றால், அதை சரிசெய்ய வேண்டும். விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கி, முடியும் வரை போலீசார் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் வாகனங்களில் உரிய ஆவணங்கள் இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்