வாலிபரை தேடிச்சென்ற 2 சிறுமிகளை, ஓடும் பஸ்சில் மீட்ட போலீசார்
இன்ஸ்டாகிராமில் பழகிய வாலிபரை தேடிச் சென்ற 2 சிறுமிகளை செல்போன் சிக்னலை வைத்து 4 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்.
காரைக்குடி,
இன்ஸ்டாகிராமில் பழகிய வாலிபரை தேடிச் சென்ற 2 சிறுமிகளை செல்போன் சிக்னலை வைத்து 4 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்.
2 மாணவிகள் மாயம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 13 வயதுடைய 2 சிறுமிகள் தோழிகளாக பழகினர்.
இருவரும் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்களது பெற்றோர் தினமும் வேலைக்கு சென்று விடுவதால் மாணவிகள் இருவரும் சரியாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து செல்போனிலேயே பொழுதை கழித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அந்த 2 மாணவிகளும் வீட்டில் இருந்து திடீரென மாயமாகினர். அவர்களை பெற்றோர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மாணவிகளின் பெற்றோர், காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலினிடம் புகார் அளித்தனர். அவரது உத்தரவின்பேரில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பூரண சந்திர பாரதி, பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் மோகன்லால் ஆகியோர் தலைமையிலான போலீசார், மாயமான மாணவிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இன்ஸ்டாகிராம் நட்பு
ேபாலீசாரின் விசாரணையில், மாணவிகள் இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் தூத்துக்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் அடிக்கடி பேசியதாகவும், அந்த இன்ஸ்டாகிராம் வாலிபரை பார்ப்பதற்காக மாணவிகள் தூத்துக்குடி சென்றதும் தெரியவந்தது. இதற்கிடையே ஒரு மாணவி, தனது தாயாருக்கு போன் செய்து நாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக கூறி இணைப்பை துண்டித்துவிட்டார். உடனடியாக போலீசார் அந்த செல்போன் எண்ணின் சிக்னலை ஆய்வு செய்தபோது அது தூத்துக்குடியில் இயங்கியது தெரியவந்தது. பின்னர் தூத்துக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டரை தொடர்பு கொண்ட காரைக்குடி போலீசார் சம்பவத்தை கூறினர். அதன்பேரில் தூத்துக்குடி போலீசார், மாணவி பேசிய செல்போன் எண் சிக்னலை தொடர்ந்து ஆய்வு செய்தபோது அது தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் பஸ்சில் இருப்பது தெரியவந்தது.
4 மணி நேரத்தில் மீட்பு
பின்னர் பஸ்சை பின் தொடர்ந்து சென்ற போலீசார் எட்டயபுரம் அருகே மடக்கி பிடித்து மாணவிகளை மீட்டு, எட்டயபுரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று அவர்களுக்கு அறிவுரை கூறினர். மேலும் போலீசாரின் விசாரணையில் மாணவிகள் சந்திக்க சென்ற அந்த வாலிபர் அவர்களை சந்திக்க வரவில்லை என்பது தெரியவந்தது.
இதை தொடர்ந்து காரைக்குடி போலீசார், மாணவிகளை அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டனர். புகார் அளிக்கப்பட்ட 4 மணி நேரத்தில் போலீசார் துரிதமாக செயல்பட்டு மாணவிகளை மீட்டது குறிப்பிடத்தக்கது.