கந்து வட்டி வசூலித்தவர் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை

திருவட்டார் அருகே கந்து வட்டி வசூலித்தவர் வீட்டில் போலீசார் அதிரடி ேசாதனை நடத்தி கடன் பத்திரங்களை கைப்பற்றினர்.

Update: 2022-12-01 19:42 GMT

நாகர்கோவில்:

திருவட்டார் அருகே கந்து வட்டி வசூலித்தவர் வீட்டில் போலீசார் அதிரடி ேசாதனை நடத்தி கடன் பத்திரங்களை கைப்பற்றினர்.

கந்து வட்டி புகார்

குமரி மாவட்டத்தில் கந்துவட்டி முற்றுலுமாக ஒழிக்கும் நடவடிக்கையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி மாவட்டம் முழுவதும் கந்துவட்டி வசூலிக்கும் கும்பலை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் திருவட்டார் அருகே உள்ள மூலச்சல் ஆலுவிளையை சேர்ந்த சிமோன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில், மூலச்சல் பகுதியை சோ்ந்த ஒருவர் பொதுமக்களிடம் கந்துவட்டிக்கு பணம் வசூலிப்பதாகவும், அவர் தன்னையும், பொது மக்களையும் தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் கூறியிருந்தார்.

அதிரடி சோதனை

இந்த புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிாிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசோபன் மற்றும் போலீசார் நேற்று மூலச்சல் பகுதிக்கு விரைந்தனர். அங்கு கந்துவட்டி வசூல் செய்யும் நபரின் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்தனர். அப்போது வீட்டில் யாரும் இல்லை. போலீசார் வருவதை முன்கூட்டியே அறிந்த அந்த நபர் வீட்டில் இருந்து தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே போலீசார் வீடு முழுவதும் சோதனை நடத்தினர். வீட்டில் பல்வேறு கடன் வழங்கும் பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அந்த நபரை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்