புதுப்பெண்ணின் கணவரிடம் போலீசார் விசாரணை

ஆலாந்துறை அருகே திருமணமான 21 நாளில் மர்மமாக உயிரிழந்த புதுப்பெண்ணின் கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-05-31 19:30 GMT

ஆலாந்துறை

ஆலாந்துறை அருகே திருமணமான 21 நாளில் மர்மமாக உயிரிழந்த புதுப்பெண்ணின் கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காதல் திருமணம்

கோவை-சிறுவாணி சாலையில் உள்ள மத்வராயபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சஞ்செய் (வயது 20). இவர் தன்னுடன் கல்லூரியில் படித்து வந்த செல்வபுரத்தை சேர்ந்த ரமணி (20) என்ற இளம்பெண்ணை கடந்த 8-ந் தேதி காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தை ரமணியின் பெற்றோர் ஏற்கவில்லை.

சஞ்செய்யின் பெற்றோர் ஏற்றுக்கொண்டதால் புதுமண தம்பதி சஞ்செய்யின் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி, ரமணி உடல் சோர்வாக இருப்பதாக கூறி படுக்கை அறைக்கு சென்று படுத்துவிட்டார். இரவில் சாப்பிட ரமணியை எழுப்ப சஞ்செய் சென்றபோது அவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.

புதுப்பெண் சாவு

உடனே அவரை பூலுவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ரமணி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அவருடைய உடல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இதற்கிடையே ரமணியின் உடலில் காயங்கள் இருப்பதாகவும், அவரை அடித்து கொலை செய்து விட்டனர் என்றும் உறவினர்கள் ரமணியின் உடலை வாங்க மறுத்து அரசு ஆஸ்பத்திரியில் போராட்டம் நடத்தினார்கள். அவர்களிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து உறவினர்கள் உடலை வாங்கிச்சென்றனர்.

கணவரிடம் விசாரணை

மேலும் மர்மமான முறையில் உயிரிழந்த ரமணியின் கழுத்து, கையில் காயம் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இது தொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து கோவை தெற்கு ஆர்.டி.ஓ. பண்டரிநாதனும் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் உயிரிழந்த ரமணியின் கணவர் சஞ்செயிடம் பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜபாண்டி விசாரணை நடத்தினார். அத்துடன் ரமணியின் தந்தை, சஞ்செயின் தந்தை மற்றும் தாய் ஆகியோாடமும் அவர் தனித்தனியாக விசாரணை நடத்தினார். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பரிசோதனை அறிக்கை

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறும்போது, திருமணமான 21 நாளில் உயிரிழந்த ரமணியின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை. அந்த அறிக்கை வந்த பின்னர்தான் அவர் உயிரிழந்தது எப்படி என்பது முழுமையாக தெரியவரும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்