வத்தலக்குண்டுவில் மாயமான மாணவியை ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீசார்

வத்தலக்குண்டுவில் மாயமான மாணவியை ஒரு மணி நேரத்தில் போலீசார் கண்டுபிடித்தனர்.

Update: 2023-02-27 20:30 GMT

வத்தலக்குண்டுவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வரும் மாணவி, நேற்று காலை தனது தாயிடம் பள்ளிக்கு செல்ல பிடிக்கவில்லை என்று கூறியுள்ளாள். இதனால் அவளது தாய், அறிவுரை கூறி பள்ளிக்கு புறப்படுமாறு வற்புறுத்தினார். இதற்கிடையே வீட்டைவிட்டு வெளியே சென்ற அந்த மாணவி, திடீரென்று மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த தாய், தனது மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் அவள் கிடைக்கவில்லை. உடனே இதுகுறித்து வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் மற்றும் போலீசார் மாயமான மாணவி குறித்து விசாரித்தனர். மேலும் வத்தலக்குண்டுவில், பெரியகுளம் சாலையில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்தனர். அப்போது மாயமான மாணவி சாலையில் நடந்து செல்லும் காட்சி அதில் பதிவாகி இருந்தது. அதை வைத்து போலீசார் தேடியபோது, பழைய வத்தலக்குண்டு பிரிவு அருகே நடந்து சென்ற மாணவியை கண்டுபிடித்தனர். மாயமான ஒரு மணி நேரத்தில் மாணவியை போலீசார் கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அந்த மாணவி, அவளது தாயிடம் ஒப்படைக்கப்பட்டாள். மேலும் மாணவியை கண்டுபிடித்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர். 

Tags:    

மேலும் செய்திகள்