பெருந்தோட்டம் ஏரியை முழுமையாக தூர்வார வேண்டும்
5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெற்று வரும் பெருந்தோட்டம் ஏரியை முழுமையாக தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
திருவெண்காடு:
5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெற்று வரும் பெருந்தோட்டம் ஏரியை முழுமையாக தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயம் சிறந்து விளங்கியது
முன்னொரு காலத்தில் ஆறு, குளம் வெட்டுதல், வாய்க்கால் தூர்வாருதல், கிணறு உள்ளிட்டவைகளை அமைத்தல் என்பன மன்னர்கள் காலத்தில் மிக பிரதானமான வேலையாக இருந்தது. ஏனென்றால் அப்போது அரசாட்சி புரிந்த மன்னர்கள் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் வாழ்ந்து வந்தனர்.
சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்றால் மழை பெய்யும் காலங்களில் அவற்றை சேமித்து வைத்தால்தான் சரியான நேரத்தில் மழையும், வெயிலும் இருக்கும் என கணித்தனர். ஏனென்றால் மழை பெய்யும் காலங்களில் சேமிக்கப்பட்ட நீரைத்தவிர மற்றவை கடலில் கலந்தது. அப்போது விவசாயம், சுற்றுச்சூழல் ஆகியவை சிறந்து விளங்கியது.
வரலாறு காணாத மழைப்பொழிவு
மேலும் மனிதன் நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ்ந்தான். விவசாயம் அதன் உப தொழில்களான கால்நடை வளர்ப்பு, சுற்றுச்சூழல் பேணுதல் ஆகியவை மிகப்பெரிய வளர்ச்சி கண்டது. ஆனால் தற்காலத்தில் விவசாயத்தையும், சுற்றுச்சூழலையும் முறையாக பராமரிக்காத காரணத்தால் மிகப்பெரிய வீழ்ச்சியை மனித சமுதாயம் கண்டு கொண்டிருக்கிறது.
அந்த காலத்தில் கட்டமைக்கப்பட்ட ஏரிகள், ஊரணிகள், குளங்கள் மற்றும் வாய்க்கால்கள் போன்றவற்றை தற்போது முறையாக பராமரிக்கப்படாததாலும், பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டதாலும் இன்று சுற்றுச்சூழல் மிகவும் மாசடைந்து காணப்படுகிறது. அதன் விளைவாக தான் வரலாறு காணாத மழைப்பொழிவு, சுட்டெரிக்கும் வெயில் ஆகியவை மனித சமுதாயத்தை பயமுறுத்தி வருகிறது.
பெருந்தோட்டம் ஏரி
இந்த நிலையில் தற்போது தான் மக்களிடையே இயற்கையை பாதுகாக்க வேண்டும் என ஆர்வம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் திருவாலி மற்றும் பெருந்தோட்டம் கிராமங்களில் ஏரிகள் உள்ளன. இதில் பெருந்தோட்டம் ஏரி கிட்டத்தட்ட 500 ஏக்கர் பரப்பளவும் சுமார் 3 கிலோ மீட்டர் நீளமும் கொண்டது. இந்த ஏரிக்கு காவிரியின் உப நதியான மணிக்கருணை ஆற்றின் மூலம் நீர் கிடைக்கிறது.
இந்த ஏரியில் சுமார் 6 அடி அளவிற்கு நீர் தேக்கிட வசதி கொண்டது. இந்த ஏரியின் மூலம் அதனை சுற்றியுள்ள 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
தூர்வார வேண்டும்
மழைக்காலங்களில் காவிரியில் கூடுதல் வெள்ள நீர் வரும்போது, அந்த நீர் மணிகருணை ஆறு மூலம் பெருந்தோட்டம் ஏரி வழியாக கடலில் கலக்கிறது. பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த ஏரி பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் மணல் மேடு மற்றும் முட்புதர்களால் சூழ்ந்து காணப்படுகிறது.
இதன் காரணமாக போதிய அளவு நீர் தேக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. எனவே பெருந்தோட்டம் ஏரியை முழுமையாக தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏரியில் படகு சவாரி செய்ய...
இதுகுறித்து பெருந்தோட்டம் ஏரி பாசனதாரர் சங்க தலைவர் வக்கீல் செந்தில் செல்வன் கூறுகையில், இந்த ஏரி நீரின் மூலம் ஏராளமான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த ஏரியை முழுமையான அளவிற்கு தூர்வாரி, அதிகளவு தண்ணீரை தேக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆண்டு தோறும் வெளிநாட்டில் இருந்து ஏராளமான பறவைகள் ஏரியில் நடுவில் உள்ள மரங்களில் தங்கி இருந்து இனப்பெருக்கம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது.
சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு தங்கி இருப்பது காண கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஏரியின் நடுவே உள்ள மணல் திட்டுகளில் கூடுதல் மரங்கள் நடுவதால் அதிக பறவைகள் தங்க வாய்ப்பு உள்ளது.
இதனால் சுற்றுச்சூழல் மேம்படும். அதேபோல் ஏரியில் படகு சவாரி நடைபெற சுற்றுலாத்துறை மூலம் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஏரியின் கறைகளை பலப்படுத்தி அதன் மேல் தார் சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.