குழாய் உடைந்து குடிநீர் வீணானது

குறிச்சி-குனியமுத்தூர் திட்ட குழாய் உடைந்து குடிநீர் வீணாக சென்றது.

Update: 2023-08-21 21:00 GMT

பொள்ளாச்சி

குறிச்சி-குனியமுத்தூர் திட்ட குழாய் உடைந்து குடிநீர் வீணாக சென்றது.

வீணாகிய தண்ணீர்

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் இருந்து குடிநீருக்கும், பாசனத்திற்கும் ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுகிறது. ஆழியாற்றில் இருந்து கோவை குறிச்சி-குனியமுத்தூர் உள்பட பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கு குடிநீர் எடுக்கப்படுகிறது. அதன்படி அம்பராம்பாளையத்தில் சுத்திகரிக்கப்படும் குடிநீர் ராட்சத குழாய்கள் மூலம் குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக ஆச்சிப்பட்டி, கிணத்துக்கடவில் நீர்உந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் இந்த திட்டத்திற்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் நேற்று திடீரென்று மின் தடை ஏற்பட்டதால் அழுத்தம் காரணமாக ஆச்சிப்பட்டியில் உள்ள குழாயில் விரிசல் ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வெளியேறி வீணாகியது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் உடனே குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. ஆனால் குழாயில் வெல்டிங் வைக்கும் பணிகள் மேற்கொள்ள வேண்டி இருந்ததால், ஏற்கனவே உள்ளே இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வால்வு வழியாக வீணாக சென்றது.

குடிநீர் தட்டுப்பாடு

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தற்போது தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்தப்படி பெய்யவில்லை. இதனால் அணைகளில் தண்ணீர் இருப்பு மிகவும் குறைவாக உள்ளது. இதன் காரணமாக பாசனத்திற்கு மட்டுமல்ல குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. சில கிராமங்களில் குடிநீர் 20 நாட்களுக்கு ஒரு முறை வினியோகம் செய்யப்படுகிறது. இதுபோன்ற நிலையில் தண்ணீர் வீணாக செல்வது வேதனை அளிக்கிறது என்றனர்.

குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ஆழியாற்றில் இருந்து தண்ணீர் எடுத்து கோவை குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளுக்கு தினமும் 8 மில்லியன் லிட்டர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதாக தகவல் வந்ததை தொடர்ந்து உடனடியாக வினியோகத்தை நிறுத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இது முடிந்ததும், வழக்கம்போல் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்