ஜாமீன் கேட்டு விடுதலைப்புலி இயக்கத்தினர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி -ஐகோர்ட்டு உத்தரவு
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் சட்டபூர்வமான ஜாமீன் கேட்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சென்னை,
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மும்பை கோட்டை கிளையில், சேமிப்பு கணக்கில் ஹமிதா ஏ லால்ஜி என்பவர் ரூ.40 கோடி டெபாசிட் செய்திருந்தார். அவர் இறந்துவிட்டதால், அந்த கணக்கு கையாளப்படாமல் இருந்து வந்தது. இதை தெரிந்து கொண்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த, ஐரோப்பாவில் வசிக்கும் உமா காந்தன் என்பவர், அத்தொகையை தங்கள் இயக்கத்துக்காக கையாடல் செய்ய முடிவு செய்துள்ளார்.
இந்த பணத்தை கைப்பற்றுவதற்காக இலங்கை தமிழரான லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா என்ற பெண், கென்னிஸ்டன் பர்னாந்து, பாஸ்கரன், ஜான்சன் சாமுவேல், தர்மேந்திரன், மோகன் ஆகியோர் இந்தியா வந்தனர்.
அவகாசம்
ஆனால், இவர்கள் அனைவரும் போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து போலீசார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த செங்கல்பட்டு செசன்சு கோர்ட்டு, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய மேலும் கால அவகாசம் வழங்கியது.
இதை எதிர்த்தும், சட்டப்பூர்வமான ஜாமீன் கேட்டும் சென்னை ஐகோர்ட்டில், கென்னிஸ்டன் பர்னாந்து, பாஸ்கரன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
தள்ளுபடி
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன், "தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை கடந்த மார்ச் மாதம் பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்துவிட்டனர்.
ஆனால், ஜனவரி மாதம் செங்கல்பட்டு கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மனுதாரர்கள் ஏப்ரல் மாதம் வழக்கு தொடர்ந்துள்ளனர். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்" என்று உத்தரவிட்டுள்ளனர்.