கோத்தகிரி அருகே, விவசாயி மீது ஸ்கூட்டரை ஏற்றியவர் கைது
கோத்தகிரி அருகே, விவசாயி மீது ஸ்கூட்டரை ஏற்றியவர் கைது செய்யப்பட்டார்.
கோத்தகிரி: கோத்தகிரி அருகே முன்விரோதத்தில் ஸ்கூட்டரை மோதவிட்டு விவசாயியை காயப்படுத்தியவர் கைது செய்யப்பட்டார்.
முன்விரோதம்
கோத்தகிரி அருகே தூனேரி தவிட்டுமொக்கை கிராமத்தை சேர்ந்த ரங்கன் என்பவரின் மகன் ராஜன்(வயது 58). விவசாயி. இவருக்கும், தொட்டண்ணி கிராமத்தை சேர்ந்த பால்ராஜின் மகன் மும்மூர்த்தி(வயது 40) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த புதன்கிழமை காலை தொட்டண்ணி பேருந்து நிறுத்தம் பகுதியில் ராஜன், கேரட் அறுவடை செய்த தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மும்மூர்த்தி ஸ்கூட்டரில் வேகமாக வந்து ராஜன் மீது வேண்டும் என்றே மோதியதாக கூறப்படுகிறது. இதில் ராஜன் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தார். தொடர்ந்து அவருக்கு, மும்மூர்த்தி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்றார். படுகாயமடைந்த ராஜன் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கைது
பின்னர் இதுகுறித்து அவரது புகாரின்பேரில் கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மும்மூர்த்தியை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோத்தகிரி மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.