பஸ் டிரைவரிடம் தகராறு செய்தவர் கைது

பஸ் டிரைவரிடம் தகராறு செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-21 17:44 GMT

விழுப்புரம் மாவட்டம் சங்கீதவாடி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவர், திருவண்ணாமலை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர், திருவண்ணாமலை நகர மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு பெரியார் சிலை அருகே வந்து கொண்டிருந்தார்.

அப்போது திருவண்ணாமலை புதுத்தெருவை சேர்ந்த லியாகத்அலி (வயது 44) என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்றார். திடீரென்று பஸ்சின் குறுக்கே சென்று பிரேக் பிடித்து உள்ளார். இதனால் பஸ் டிரைவருக்கும், லியாகத்அலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் இருவரும் தண்ணீர் பாட்டிலால் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். இதனால் சாலையின் இருபுறங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த கிழக்கு போலீசார் பஸ் டிரைவரை தாக்கிய லியாகத்அலியை கைது செய்தனர்.

மேலும் பஸ் பயணிகளை இறக்கி வேறொரு பஸ்சில் அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்