கலெக்டர் தலைமையில் நடந்த அமைதிக்கூட்டத்தில் சுமூக முடிவு

மேல்பாதி கோவில் பிரச்சினை தொடர்பாக கலெக்டர் தலைமையில் நடந்த அமைதிக்கூட்டத்தில் சுமூக முடிவு எட்டப்பட்டது.

Update: 2023-05-24 18:45 GMT

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல்பாதி கிராமத்தில் தர்மராஜா, திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்த ஒரு தரப்பினருக்கு அனுமதி மறுத்து மற்றொரு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் இந்த எதிர்ப்பின் காரணமாக ஒரு தரப்பினர், கோவிலுக்குள் செல்ல முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது.

இந்நிலையில் இப்பிரச்சினை தொடர்பாக இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ், தாசில்தார் வேல்முருகன் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.

இதில் இரு தரப்பினரிடமும் மாவட்ட கலெக்டர் சி.பழனி, சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சுமூக முடிவு ஏற்பட்டது. இது குறித்து கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சமரச தீர்வு

மேல்பாதி கோவிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதுதொடர்பாக ஏற்கனவே 2 கட்டமாக கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின்போது இருதரப்பினரையும் அழைத்து சுமூக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதுடன் இரு தரப்பினரிடமும் கருத்துகள் கேட்கப்பட்டு சில ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து தற்போது நடைபெற்ற இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரிடையே சமரச தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்வதற்கான நாள் குறித்து இரு தரப்பினரும் தீர்மானித்து தெரிவிக்குமாறும், இரு தரப்பினரும் அமைதியான முறையில் வழிபாடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரு தரப்பினரும் சமாதானமாக செல்வதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்