மண் எடுத்ததால் பள்ளமான சுடுகாடு செல்லும் பாதை
திருவாரூர்-தஞ்சாவூர் சாலை அமைக்கும் பணிக்காக அருகில் உள்ள சுடுகாடு செல்லும் பாதையில் இருந்து மண் எடுத்ததால் அந்த சாலை பள்ளமாக உள்ளது. இதை அதிகாரிகள் சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரடாச்சேரி:
திருவாரூர்-தஞ்சாவூர் சாலை அமைக்கும் பணிக்காக அருகில் உள்ள சுடுகாடு செல்லும் பாதையில் இருந்து மண் எடுத்ததால் அந்த சாலை பள்ளமாக உள்ளது. இதை அதிகாரிகள் சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலை அமைக்கும் பணி
கொரடாச்சேரி ஒன்றியம் அம்மையப்பன் பகுதியில் திருவாரூர்- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நெடுஞ்சாலையின் அருகில் உள்ள சுடுகாட்டை, அம்மையப்பன், என்கண், காவனூர் உள்ளிட்ட ஊராட்சி மக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த பகுதியில் சாலை அமைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
புதிதாக அமைக்கப்பட்டு வரும் சாலையால், இந்த சுடுகாட்டுக்கு செல்லும் பாதை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. அதாவது சுடுகாட்டுக்கு செல்லக்கூடிய பாதையை முற்றிலுமாக பெயர்த்து எடுத்து புதிதாக அமைத்து கொண்டிருக்கும் தேசிய நெடுஞ்சாலைக்கு மண் நிரப்பியுள்ளார்கள்.
பள்ளமாக உள்ளது
இதனால் சுடுகாடு செல்லும் பாதை பள்ளமாக உள்ளது. அதைப்போல அம்மையப்பன் உள்ளிட்ட ஊர்களுக்கு வடிகாலாகவும், அம்மையப்பன் மற்றும் அதனை சுற்றியுள்ள பல ஊர்களின் குளங்களை நிரப்பக்கூடிய நீர்வரத்து பாசன வாய்க்காலையும் முற்றிலுமாக தூர்த்து விட்டார்கள். இதனால் எவ்வாறு குளங்களில் நீர் நிரப்புவது என தெரியாமல் மக்கள் உள்ளனர். எனவே அப்பகுதி மக்கள் பயன்படுத்தும் சுடுகாட்டுக்கு செல்ல வழி ஏற்படுத்தி தர வேண்டும். வடிகால் மற்றும் நீர்வரத்து வாய்க்காலை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.