கவனக்குறைவால் சிறுமியை பஸ்சில் விட்டு சென்ற பெற்றோர்
சுற்றுலா வந்த இடத்தில் கவனக்குறைவால் சிறுமியை பஸ்சில் விட்டு சென்ற பெற்றோரால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மீட்டு சிறுமியை ஒப்படைத்தனர்.
நாகர்கோவில்:
சுற்றுலா வந்த இடத்தில் கவனக்குறைவால் சிறுமியை பஸ்சில் விட்டு சென்ற பெற்றோரால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மீட்டு சிறுமியை ஒப்படைத்தனர்.
சிறுமி மாயம்
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் குமரி மாவட்டத்துக்கு நேற்று முன்தினம் சுற்றுலா வந்தனர். அவர்களுடன் 8 வயது சிறுமியும் இருந்தார். கன்னியாகுமரியை சுற்றி பார்த்த அவர்கள் தங்களது ஊருக்கு செல்ல தயாரானார்கள். இதற்காக கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் அரசு பஸ்சில் ஏறினர். வடசேரி பஸ் நிலையம் வந்ததும் பஸ்சில் இருந்து அனைவரும் இறங்கி விட்டனர்.
ஆனால் பஸ்சை விட்டு இறங்கிய சிறிது நேரம் கழித்து தான் 8 வயது சிறுமி தங்களுடன் இல்லாததை பெற்றோர் பார்த்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் பதற்றத்துடன் பஸ் நிலையம் முழுவதும் தேடினர். ஆனால் மாயமான சிறுமி கிடைக்கவில்லை.
பரபரப்பு
ஒருவேளை பஸ்சிலேயே சிறுமியை விட்டு வந்திருக்கலாம் என கருதி போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் நடந்த விஷயத்தை தெரிவித்தனர். உடனே போக்குவரத்து கழக அதிகாரிகள் அந்த குடும்பத்தினர் பயணம் செய்த பஸ்சின் விவரத்தை கேட்டனர். பின்னர் சம்பந்தப்பட்ட பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை தொடர்பு கொண்டு பேசினா். அப்போது பஸ்சானது வடசேரியில் இருந்து புறப்பட்டு கன்னியாகுமரி செல்வதற்காக அண்ணா பஸ் நிலையத்தில் நிற்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட சிறுமியின் அடையாளங்களை கூறி அந்த சிறுமி பஸ்சில் இருக்கிறாரா? என்று பார்க்கும்படி கண்டக்டரிடம் தெரிவித்தனர். உடனே அவர் பஸ்சின் இருக்கைகளை பார்த்தார். அப்போது சிறுமி பஸ் இருக்கையில் அமர்ந்தபடி தூங்கிக் கொண்டிருந்தாள். அந்த சிறுமி தான் அவர்களுடையது என்பது தெரியவந்தது.
மீட்பு
பின்னர் சிறுமியை மீட்டு அண்ணா பஸ் நிலைய அதிகாரிகளிடம் கண்டக்டர் ஒப்படைத்தார். தொடர்ந்து சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அண்ணா பஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அங்கு வைத்து சிறுமி மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பெற்றோரின் கவனக்குறைவால் குழந்தையை பஸ்சிலேயே விட்டு சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.