போலீஸ் நிலைய வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற ஊராட்சி தலைவரால் பரபரப்பு
போலீஸ் நிலைய வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற ஊராட்சி தலைவரால் பரபரப்பு ஏற்பட்டது.
மணப்பாறையை அடுத்த அணியாப்பூர் ஊராட்சி தலைவராக இருப்பவர் அசோக் குமார் (வயது 43). இவருக்கு வீரப்பூரை சேர்ந்த பொன்னர், அவரது மகன் உள்ளிட்ட 3 பேர் தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தனராம். இது தொடர்பாக அவர் மணப்பாறை போலீசில் புகார் அளித்தார். ஆனால் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி நேற்று அசோக் குமார் போலீஸ் நிலைய வளாகத்திற்குள் மண்எண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்றார். இதை கண்ட அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். பின்னர் அசோக் குமார் அளித்த புகாரின் பேரில் பொன்னர் மற்றும் அவரது மகன் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவத்தால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.