போலீஸ் பாதுகாப்புடன் ஊராட்சி மன்ற தலைவர் தேசிய கொடி ஏற்றினார்

எடுத்தவாய்நத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் போலீஸ் பாதுகாப்புடன் ஊராட்சி மன்ற தலைவர் தேசிய கொடி ஏற்றினார்

Update: 2022-08-15 17:01 GMT

கச்சிராயப்பாளையம்

கள்ளக்குறிச்சி அருகே எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரதினத்தன்று ஊராட்சி மன்ற தலைவர் தேசியகொடிஏற்றுவது வழக்கம். ஆனால் தற்போதைய ஊராட்சி மன்ற தலைவர் சுதாவரதராஜன் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் தேசிய கொடி ஏற்றுவதற்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பா.ஜ.க.வினர் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர். மேலும் தனக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி தமிழக முதல்-அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு ஊராட்சி மன்ற தலைவர் மனு அனுப்பினார்.

இதைத் தொடர்ந்து சின்னசேலம் தாலுகா அலுவலகத்தில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் தேசிய கொடியை ஏற்ற ஊராட்சி மன்ற தலைவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை எடுத்தவாய்நத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் சுதாவரதராஜன் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதில் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அசம்பாவிதங்களை தடுக்க பள்ளி வளாகத்தை சுற்றிலும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்