மின்னல் தாக்கியதில் பனை மரம் தீப்பற்றி எரிந்தது

திருவாடானை அருகே மின்னல் தாக்கியதில் பனை மரம் தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்த அதிர்ச்சியில் 2 பெண்கள் மயங்கி விழுந்தனர்.

Update: 2022-06-18 16:14 GMT

தொண்டி, 

திருவாடானை அருகே மின்னல் தாக்கியதில் பனை மரம் தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்த அதிர்ச்சியில் 2 பெண்கள் மயங்கி விழுந்தனர்.

பனை மரம் தீப்பற்றி எரிந்தது

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை யூனியன், டி.நாகனி ஊராட்சி இளங்குன்றம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்றன. இதில் அந்த ஊராட்சியை சேர்ந்த ஏராளமான பெண்கள் ஈடுபட்டு இருந்தனர்.

பணி முடிந்த நிலையில் ஓய்வு எடுப்பதற்காக பணியில் ஈடுபட்ட பெண்கள் ஆங்காங்கே மரத்தின் நிழலில் அமர்ந்திருந்தனர். அப்போது நேற்று மதியம் 1 மணியளவில் திடீரென ஒரு பனைமரத்தின் மீது பலத்த சத்தத்துடன் கூடிய மின்னல் கீற்று விழுந்துள்ளது. உடனே பனைமரம் தீப்பற்றி எரிய ெதாடங்கியது. தீ மளமளவென எரிந்தது.

2 பெண்கள் மயங்கி விழுந்தனர்

அந்த பனை மரத்தின் கீழ் அமர்ந்து இருந்த டி.நாகனி கிராமத்தைச் சேர்ந்த சங்கையா மனைவி பூபதி(வயது 37), முருகன் மனைவி செல்வி(40) ஆகிய இருவரையும் மின்னல் லேசாக தாக்கியது. தன் கண்முன்னே பனைமரம் தீப்பற்றி எரிவதை பார்த்த இருவரும் அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுந்தனர்.

அந்த பகுதியில் வேலை பார்த்த மற்ற பெண்களும் பனை மரம் பற்றி எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மின்னல் லேசாக தாக்கியதில் செல்விக்கு காது கேட்கவில்லை. பூபதி கையை தூக்க முடியாமல் அவதிப்பட்டார்.

இதைதொடர்ந்து ஊராட்சித் தலைவர் இந்திரா ராஜேந்திரன், ஊராட்சி செயலாளர் சங்கையா மற்றும் பலர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மின்னல் தாக்கியதில் 100 நாள் வேலை திட்ட பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்