ஆக்கிரமிப்பின் பிடியில் பழனி அடிவாரம் கிரிவீதிகள்

ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ள பழனி அடிவாரம் கிரிவீதிகளில் அய்யப்ப சீசன் தொடங்குவதற்கு முன்பு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா? என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2023-10-12 23:15 GMT

கிரிவீதிகள்

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இதில் பெரும்பாலான பக்தர்கள் திருஆவினன்குடியில் தரிசனத்தை முடித்துவிட்டு மலைக்கோவில் செல்கின்றனர். பின்னர் மலையை சுற்றியுள்ள கிரிவீதிகளை வலம் வருகின்றனர். அப்போது கிரிவீதிகளில் விற்கப்படும் பேன்சி பொருட்கள் மற்றும் பஞ்சாமிர்தம் ஆகியவற்றை பக்தர்கள் வாங்கி செல்கின்றனர். அதேபோல் உள்ளூர் பக்தர்களும் காலை, மாலையில் கிரிவலம் வருகின்றனர். எனவே கிரிவீதிகள், சன்னதிவீதியில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்படும்.

ஆனால் பழனி கிரிவீதிகள், சன்னதிவீதி, திருஆவினன்குடி ரோடு ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதாவது சாலையோர பகுதியை ஆக்கிரமித்து வியாபாரிகள் பொருட்களை வைத்து விற்பனை செய்கின்றனர். குறிப்பாக வடக்கு, மேற்கு கிரிவீதிகளில் பாதையின் நடுவில் தள்ளுவண்டிகளை அமைத்தும், தரையில் வைத்தும் வியாபாரிகள் பொருட்களை விற்கின்றனர். இது தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது. குறிப்பாக கூட்டமான நேரத்தில் நடந்து செல்லவே பக்தர்கள் சிரமப்படுகின்றனர். அதேபோல் காவடி, அலகு குத்தி ஆடி வரும் பக்தர்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

ஆக்கிரமிப்பு அகற்றம்

இந்நிலையில் விரைவில் கார்த்திகை மாத சீசன் தொடங்க உள்ளது. இந்த சீசன் காலத்தில் தினமும் பல்லாயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் பழனிக்கு வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் முடித்து அடிவாரத்தில் பஞ்சாமிர்தம், பேன்சி பொருட்களை வாங்கி செல்வது வழக்கம்.

எனவே பக்தர்களை பாதிக்கும் வகையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்பாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்