கடையை காலி செய்ய கூறியதால் உரிமையாளருக்கு கத்திக்குத்து

படவேடு அருகே கடையை காலி செய்ய கூறியதால் கடை உரிமையாளரை கத்தியால் குத்திய ராணுவ வீரரின் மனைவி உள்பட இருதரப்பினரை சேர்ந்த 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-06-11 12:00 GMT

கண்ணமங்கலம்

படவேடு அருகே கடையை காலி செய்ய கூறியதால் கடை உரிமையாளரை கத்தியால் குத்திய ராணுவ வீரரின் மனைவி உள்பட இருதரப்பினரை சேர்ந்த 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ராணுவ வீரர்

கண்ணமங்கலம் அருகே படவேடு கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன், இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கீர்த்தி.

இவர் படவேடு ரேணுகாம்பாள் கோவில் எதிரே குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமு (வயது 41) என்பவரின் கடையை மேல்வாடகை எடுத்து பேன்சி ஸ்டோர் நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் கீர்த்தியிடம் கடையை காலி செய்ய கூறி பிப்ரவரி 10-ந் தேதி வரை ராமு கெடு தந்துள்ளார். கீர்த்தி கடையை காலி செய்யாமல் வாடகையும் தரவில்லை.

எனவே ராமு நேற்று  காலை கடைக்கு வந்து கீர்த்தியிடம் கடையை காலி செய்ய கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கத்திக்குத்து

இதுகுறித்து தகவலறிந்த கீர்த்தியின் சகோதரர்கள் உதயா, ஜீவா ஆகியோர் வந்து தேங்காய் உடைக்கும் கத்தியால் ராமுவை குத்தினர். இதில் காயமடைந்த ராமு சிகிச்சைக்காக ரத்தினகிரி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராமுவின் நண்பர்கள் ரத்தினபுரியை சேர்ந்த ஹரிஹரன், செல்வராஜ், செல்வராஜ் மகன் ஜெயகோபி, மது ஆகியோர் கடைக்கு வந்து கடையில் இருந்த பொருட்களை தெருவில் எடுத்து வைத்தனர்.

இதனை தடுக்க வந்த கீர்த்தியை ஆபாசமாக திட்டி கையால் தாக்கி கடையை காலி செய்யக்கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

வழக்குப்பதிவு

இது சம்பந்தமாக ராமு சந்தவாசல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கீர்த்தி, உதயா, ஜீவா ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கீர்த்தி கொடுத்த புகாரின் பேரில் ஹரிஹரன், செல்வராஜ், ஜெயகோபி, மது ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடவடிக்கை எடுக்கப்படும்

இந்த நிலையில் ராணுவ பணியில் உள்ள கீர்த்தியின் கணவர் பிரபாகரனுக்கு, சிலர் தவறான தகவல் கொடுத்துள்ளனர்.

இதன்காரணமாக, தனது மனைவி கீர்த்தி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது புகார் செய்தால் போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுப்பதாக அவர் வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்பி உள்ளார்.

அது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மறுப்பு தெரிவித்து, இருதரப்பிலும் கொடுத்த புகார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தவறு யார் செய்திருந்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி உள்ளார்.

இந்த சம்பவம் காரணமாக படவேடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. .

Tags:    

மேலும் செய்திகள்