மூதாட்டியை கட்டி போட்டு நகை, பணம் கொள்ளை

தண்ணீர் கேட்பது போல் நடித்து மூதாட்டியை கட்டி போட்டு நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள் 2 பேர் விவசாயியை தாக்கி விட்டு தப்பி சென்றனர்.

Update: 2022-10-07 18:45 GMT

துடியலூர்

தண்ணீர் கேட்பது போல் நடித்து மூதாட்டியை கட்டி போட்டு நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள் 2 பேர் விவசாயியை தாக்கி விட்டு தப்பி சென்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

குடிக்க தண்ணீர் கேட்டனர்

கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் ஹவுசிங் யூனிட் அருகே தனியார் பள்ளிக்கூடத்தின் பின்புறத்தில் உள்ள பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது77). விவசாயி. இவருடைய மனைவி சுப்பாத் தாள் (69). இவர்கள் வீட்டில் 10 மாடுகளை வளர்த்து வருகின்றனர். அதன் மூலம் பால் வியாபாரம் செய்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் சுப்பாத்தாள் வீட்டில் இருந்த போது அடையாளம் தெரியாத 2 பேர் வந்தனர். அவர்கள், குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டு உள்ளனர். உடனே சுப்பாத்தாள் தண்ணீர் எடுத்து கொண்டு வருவதற்காக வீட்டுக்குள் சென்றார்.

மூதாட்டியை கட்டி போட்டனர்

அப்போது அவரை பின்தொடர்ந்து வீட்டுக்குள் சென்ற மர்ம நபர்கள் 2 பேரும் திடீரென்று சுப்பாத்தாளின் வாய், கை கால்களை வேஷ்டியால் கட்டி போட்டனர்.

இதையடுத்து அவர்கள், அங்குள்ள பீரோவில் இருந்த 8 பவுன் தங்க சங்கிலி, 2 தங்க மோதிரம், ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடி்து விட்டு தப்பி செல்ல முயன்றனர்.

வீட்டுக்குள் சத்தம் கேட்டதை அறிந்து சுப்பிரமணி உள்ளே வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மர்ம நபர்கள், சுப்பிரமணி யை கீழே தள்ளிவிட்டு தப்பி சென்று விட்டனர்.

2 பேருக்கு வலைவீச்சு

இது குறித்த தகவலின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு நமச்சிவாயம், இன்ஸ்பெக்டர் தாமோதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். மூதாட்டி மற்றும் அவரு டைய கணவரை தாக்கி விட்டு நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்