ஒற்றை கையுடன் சைக்கிளில் சென்று தபால்களை கொடுக்கும் முதியவர்...!

கோவையில் ஒற்றை கையுடன் சைக்கிளில் சென்று முதியவர் தபால்களை கொடுத்து வருகிறார்.;

Update:2022-06-27 15:57 IST

கோவை,

புதுக்கோட்டை மாவட்டம் சடையம்பட்டி கிராமத்தை பூர்வீகமாக கொண்ட ஸ்ரீராமன். இவர் தற்போது கோவையில் மனைவி மைதிலியுடன் வசித்து வருகிறார். கடந்த 1969-ம் ஆண்டு இவரது வீடு அருகே உள்ள கிணற்று பக்கம் மாடுகள் திரிவதை பார்த்தார். அந்த மாடுகள் கிணற்றில் தவறி விழாமல் இருப்பதற்காகவும், குழந்தைகளை முட்டி விடக்கூடாது என்பதற்காகவும் ஸ்ரீராமன் மாடுகளை பிடித்து மரத்தில் கட்ட முயன்றார்.

அப்போது அதில் ஒரு மாடு திடீரென ஸ்ரீராமுவை கொம்பால் தூக்கி வீசியது. இதில் அவரது வலது கையில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டது. அந்த காலத்தில் நவீன வசதிகள் எதுவும் இல்லாததால் அவரது வலது கை துண்டிக்கப்பட்டது. பின்னர் அவர் செயற்கை கை பொருத்தினார். ஆனால் அதிக எடை இருந்ததால் அது அவருக்கு சரிவரவில்லை.

பின்னர், ஒற்றை கையால் அவர் சைக்கிளை ஓட்ட ஆரம்பித்தார். 1971-ம் ஆண்டு முதல் அவர் தபால் துறையில் பணியாற்றினார். 2007-ம் ஆண்டு அவர் பணி ஓய்வுபெற்றார்.

குடும்பத்தை காப்பாற்ற அவர் கோவைக்கு வந்தார். பின்னர் அவர் தனக்கு தபால் துறையில் இருந்த அனுபவத்தை கொண்டு ஒரு கொரியர் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். அன்று முதல் இன்று வரை அவர் தினமும் பல கிலோ மீட்டர் தூரம் ஒற்றை கையால் சைக்கிளை ஓட்டிச்சென்று வீடுவீடாக கொரியர் சேவை செய்து வருகிறார்.

80 வயதிலும் அசராமல் இந்த வேலையை செய்து வரும் ஸ்ரீராமன் இது குறித்து கூறியதாவது:-

மனதில் தைரியம் இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். எனக்கு உடலில் தெம்பு இருக்கிறது. மனதில் நம்பிக்கையும் உள்ளது. இதனால் இந்த வயதிலும் வேலை செய்து வருகிறேன். எனது மனைவி நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவரால் நீண்ட நேரம் நிற்க முடியாது.

இதனால் அவருக்கு மாதம் மருத்துவ செலவு 6 ஆயிரம் ரூபாய் ஆகிறது. அதேபோல குடும்ப செலவையும் பார்க்க வேண்டி உள்ளது. இதை கருத்தில் கொண்டு உடலில் முக்கியமாக திகழும் வலது கை இல்லாவிட்டாலும் மனம் தளராமல் இடது கை உதவியுடன் தினமும் 20 முதல் 30 கிலோமீட்டர் தூரம் சைக்கிளை மிதித்து சென்று இந்த வேலையை செய்து வருகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்