மரப்பாலம் முறிந்து விழுந்து முதியவர் காயம்

மரப்பாலம் முறிந்து விழுந்து முதியவர் காயம்

Update: 2023-02-14 19:41 GMT

திருபுவனம் காவிரி ஆற்றில் மரப்பாலம் முறிந்து விழுந்து முதியவர் காயமடைந்தார். இதனால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

மரப்பாலம் முறிந்து முதியவர் காயம்

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தையும், திருவிசநல்லூரையும் இணைக்கும் வகையில் காவிரியில் நடைபாலம் இருந்து வந்தது. தினசரி ஆயிரக்கணக்கானோர் சென்று வரக்கூடிய முக்கிய பாலமான இதில் புதிய பாலம் கட்டுவதற்காக கடந்த 2ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிக மரப்பாலம் அமைத்திருந்தார்கள். கடந்த 1 ஆண்டுக்கு மேலாக கான்கிரீட் பாலம் கட்டும்பணி நடைபெற்று வருகிறது. பாலம் பலமுறை பழுதடைந்துள்ளது. பழுதான இந்த மரப்பாலத்தில் பள்ளி மாணவ- மாணவிகள், பொதுமக்கள் தினமும் ஆபத்தான பயணம் செய்து வந்தனர். நேற்று மாலை இந்த மரப்பாலத்தில் வேப்பத்தூர் பாகவதபுரம் தட்டாரத்தெரு பகுதியைச் சேர்ந்த நடராஜன் (வயது60) என்பவர் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். பாலத்தின் நடுவே வந்த போது பாலம் திடீரென முறிந்து விழுந்தது. இதில் நடராஜன் ஆற்றுக்குள் விழுந்து காயமடைந்தார். இதில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

சாலைமறியல்

இதையடுத்து முறிந்து விழுந்த மரப்பாலத்தை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தியும், விபத்தில் காயமடைந்த முதியவருக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் திருவிசநல்லூர் கல்லணை- பூம்புகார் சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து திருவிடைமருதூர் போலீசார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். திருவிடைமருதூர் தாசில்தார் சுசீலா, நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சிவராஜ் மற்றும் அலுவலர்கள் போராட்டக் காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக தற்காலிக தரைப்பாலம் அமைத்து தரப்படும் என்றும், ஜூன் மாதத்திற்குள் கான்கிரீட் பாலம் கட்டி முடிக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். இதையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்