முதியவர் அடித்துக்கொலை
வேதாரண்யம் அருகே முதியவரை அடித்துக்கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே முதியவரை அடித்துக்கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
தொழிலாளி
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடிநெல்வயல் நடுக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவம்(வயது72). இவரது வீட்டுக்கு அருகே வசிப்பவர் கந்தசாமி(41). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு உப்பு உற்பத்தி நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் 2 பேரும் நண்பர்கள்.
நாகக்குடையான் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட கந்தசாமி கடிநெல்வயல் கிராமத்தில் உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு அந்த கிராமத்திலேயே வசித்து வருகிறார்.
அடித்துக்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் சதாசிவத்துக்கும், கந்தசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கந்தசாமி உருட்டுக்கட்டையால் சதாசிவத்தை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கும், இதை தொடர்ந்து தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சதாசிவம் பரிதாபமாக உயிரிழந்தார்.
கைது
இதுகுறித்த புகாரின் போரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கந்சாமியை கைது செய்தனர்.