மாடு முட்டியதில் முதியவர் பலி

குருபரப்பள்ளி அருகே நடந்த எருது விடும் விழாவில் மாடு முட்டியதில் முதியவர் பலியானார்.

Update: 2023-04-18 18:38 GMT

கிருஷ்ணகிரியை அடுத்த குருபரப்பள்ளி பெரிய குட்டூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் பண்டிகையையொட்டி நேற்று எருது விடும் விழா நடந்தது. இதில், கிருஷ்ணகிரி, சூளகிரி, வேப்பனப்பள்ளி மற்றும் திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 350-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

விழாவை காண சுற்று வட்டாரத்தில் இருந்து, 1,500-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். இந்த நிலையில் சீறி பாய்ந்து வந்த காளைகளை காண கிராம மக்கள் ஆர்வமாக இருந்தனர். அப்போது வேகமாக ஓடி வந்த காளை ஒன்று முட்டி தள்ளியதில், கிருஷ்ணகிரியை அடுத்த சிப்பாயூரை சேர்ந்த முனுசாமி (வயது 65) என்பவர் தூக்கி வீசப்பட்டார்.

பரிதாப சாவு

இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி போலுப்பள்ளி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது தொடர்பாக குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். எருது விடும் விழா நடைபெறும் இடங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தரவேண்டும் என்றும், அரசின் விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்