பழைய பஸ் நிலையத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும்

பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-11-20 18:36 GMT

காமராஜர் பஸ் நிலையம்

தமிழகத்தில் மையப்பகுதியில் இருக்கும் பெரம்பலூர் கடந்த 1995-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் இருந்து மாவட்டமாக உதயமானது. அதற்கு முன்பு தற்போதைய மாவட்ட தலைநகர் பெரம்பலூர் ஒரு பேரூராட்சியாக (நகர பஞ்சாயத்து) மட்டுமே இருந்தது. 1966-ம் ஆண்டு அப்போதைய தலைவர் அழகேசன் என்பவரது முயற்சியால் பெரம்பலூருக்கு நகர பஞ்சாயத்து பஸ் நிலையம் கட்டப்பட்டது.

இந்த பஸ் நிலையத்தை 1966-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ந்தேதி முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் திறந்து வைத்தார். இதனால் அந்த நகராட்சி பஞ்சாயத்து பஸ் நிலையம் காமராஜர் பஸ் நிலையம் என்று அழைக்கப்பட்டு வந்தது.

நகரின் முக்கிய பகுதி

மாவட்டமாக உதயமான போது பெரம்பலூருக்கு புதிதாக பஸ் நிலையம் கட்டப்பட்டதால், பெரம்பலூர் காமராஜர் பஸ் நிலையம் என்பது, தற்போது வரை பழைய பஸ் நிலையம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையத்திற்கு முன்பு பல மாவட்டங்களில் இருந்து பஸ்கள் வந்து சென்றன. தற்போது இந்த பழைய பஸ் நிலையத்துக்கு அரசு டவுன் பஸ்களும், சாதாரண அரசு பஸ்களும், மினி பஸ்களும் வந்து செல்கின்றன.

ஆனால் தற்போது பெரம்பலூர் தரம் உயர்த்தப்பட்டு 2-ம் நிலை நகராட்சியாக இருந்தாலும், 56 ஆண்டுகளுக்கு மேலாக நகரின் முக்கிய பகுதியாக பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் திகழ்ந்து வருகிறது.

அடிப்படை வசதிகள் இல்லை

பஸ்நிலையம் அருகே கடைவீதி, ஜவுளிகடைகள், நகைக்கடைகள், தினசரி காய்கறி மார்க்கெட், தலைமை தபால் நிலையம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை உள்ளதால் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இருந்து பொதுமக்கள் பஸ்கள் மூலம் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் வந்து தான் மேற்கண்ட இடங்களுக்கு செல்வார்கள். பழைய பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் வைத்து ஷேர் ஆட்டோக்களும் அதிகமாக இயங்கி வருகிறது.

தற்போது பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் போதிய இடவசதி இல்லாததால் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. பயணிகளுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, இருக்கை வசதி இல்லை. பழைய பஸ் நிலையத்தின் தென்புற கட்டிடங்கள் அடிக்கடி புனரமைக்கப்பட்டு வந்தாலும், அதனால் பயணிகளுக்கு பயனில்லை.

புதிதாக கட்ட வேண்டும்

பழைய பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கடைகள் போடாமல், சிலர் அதற்கு முன்பு ஆக்கிரமித்து கடைகள் போட்டுள்ளனர். இதனால் பயணிகள் நிற்பதற்கும், பஸ்கள், மினி பஸ்கள் வந்து செல்வதற்கும் இடையூறாக உள்ளது. எனவே பயணிகளுக்கு நவீன வசதிகளுடன் பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தை புதிதாக கட்ட வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினர் கோரிக்கையாக உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

குப்பைகளால் துர்நாற்றம்

பெரம்பலூரை சேர்ந்த குமார்:- பண்டிகை காலங்களில் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்படும். ஆனால் பயணிகளுக்கு குடிநீர் வசதி, இருக்கை வசதி, கழிவறை வசதி ஏற்படுத்தி தரவில்லை. இருக்கை வசதி இல்லாததால் பயணிகள் தரையில் அமரும் சூழ்நிலை ஏற்படுகிறது. தற்காலிகமாக கடைகள் அமைத்து இருப்பவர்களில் சிலர் தங்களுடைய நாற்காலிகள் பயணிகள் அமருவதற்கு போட்டு வைத்துள்ளனர். நகராட்சி நிர்வாகம் பழைய பஸ் நிலையத்தில் பயணிகள் அமருவதற்கு இருக்கை வசதி, குடிநீர் வசதி மற்றும் தாய்மார்கள் பாலூட்டும் அறையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். பஸ் கால அட்டவணை இடம் பெற செய்ய வேண்டும். கடைகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் பஸ் நிலையம் அருகே மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. அதனை உடனுக்குடன் அள்ளுவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குண்டும், குழியுமான சாலை

அரணாரையை சேர்ந்த லோகநாதன்:- நான் சிறுவனாக இருந்த போது இந்த பஸ் நிலையம் குப்பை மேடாக காட்சியளித்தது. முன்பு அதனருகே தான் பெரம்பலூருக்கு பஸ் நிலையம் செயல்பட்டு வந்தது. 1966-ம் ஆண்டுக்கு முன்பு அந்த பஸ் நிலையத்தில் நடந்த ஒரு வெடி விபத்தில் பலர் பலியாகினர். இதையடுத்து குப்பை மேட்டில் பஸ் நிலையம் கட்டப்பட்டு பெருந்தலைவர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது. அப்போது இந்த பஸ் நிலையம் பெரிய பஸ் நிலையமாக கருதப்பட்டது. தற்போது பஸ் நிலையம் போதிய இடவசதி இல்லாததால் பஸ்கள் வந்து செல்ல சிரமமாக உள்ளது. மேலும் பழைய பஸ் நிலையத்தில் சாலையும் குண்டும், குழியுமாக உள்ளது. அதனருகே அம்பேத்கர் சிலை முதல் பெரியார் சிலை வரை சாலையும் மோசமாக காட்சியளிக்கிறது. பழைய பஸ் நிலையத்தை புதுப்பிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிதாக கட்ட வேண்டும்

பெரம்பலூர் இளைஞர்கள் இயக்கத்தை சேர்ந்த கவுதமன்:- பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள பழைய கட்டிடங்களை இடித்து அகற்றி விட்டு, தற்போதைய வசதிக்கு ஏற்ப புதிய கட்டிடங்களை கட்ட வேண்டும். இதனால் பஸ் நிலையத்துக்கு இடம் கூடுதலாக கிடைக்கும். பஸ்கள் நின்று செல்ல நடைமேடை வசதி ஏற்படுத்தலாம். பழைய பஸ் நிலையத்தை புதுப்பிக்காமல் இடித்து அகற்றி விட்டு புதிதாக பஸ் நிலையம் கட்ட வேண்டும் அல்லது மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பஸ் நிலையத்தை புதிதாக கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகம் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்