மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது

மாமல்லபுரத்தில் நேற்று பெய்த கன மழையால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.

Update: 2022-11-12 08:47 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நேற்று காலை முதல் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாமல் பலத்த மழை பெய்தது. மழையால் சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்திற்கு மாறாக குறைவாகவே காணப்பட்டது. கடற்கரை கோவில், வெண்ணை உருண்டை பாறை, ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களுக்கு குறைந்த அளவிலான பயணிகளே வருகை தந்தனர்.

அதிக அளவில் பயணிகள் வரத்து இல்லாததால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் தொல்லியல் துறையின் நுழைவு கட்டண மையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. குறைந்த அளவு சுற்றுலா பயணிகளே மாமல்லபுரம் புராதன மையங்களில் காணப்பட்டனர். குறிப்பாக மழையால் சுற்றுலா பயணிகள் சிலர் குடை பிடித்த நிலையிலும், குடை வசதி இல்லாத பயணிகள் பிளாஸ்டிக் பைகள், அட்டைகள் உள்ளிட்டவற்றை தலையில் போர்த்திக்கொண்டு புராதன சின்னங்களை கண்டுகளித்து விட்டு சென்றதை காண முடிந்தது. சிலர் மழையில் நனைந்து கொண்டே மழை தூறலின் உற்சாக மிகுதியில் புராதன சின்னங்களை செல்பி எடுத்து, கண்டுகளித்து விட்டு சென்றதையும் காண முடிந்தது. குறிப்பாக கடற்கரை கோவி்ல் வளாகத்தில் உள்ள அகழியில் மழை நீர் குளம் போல் தேங்கி ரம்மியமாக காட்சி அளித்ததை காண முடிந்தது.

கடற்கரை கோவிலின் படகுதுறை மழை நீரால் நிரம்பி வருகிறது. குடை வசதி இல்லாமல் சுற்றுலா வந்த சில பயணிகள் கடற்கரை கோவில் வளாகத்தில் நிழற்குடை வசதி இல்லாத நிலையில், மழையில் நனைந்து கொண்டே அவசர, அவசரமாக அங்குள்ள சிற்பங்களை கண்டுகளித்துவிட்டு சென்றதையும் காண முடிந்தது.

பலத்த மழையால் மாமல்லபுரம் சாலைகளில் வாகன போக்குவரத்து முற்றிலும் நேற்று முடங்கியது. தெருக்களில் மக்கள் நடமாட்டம் காணப்படவில்லை. பலத்த மழையால் நேற்று சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் போதிய வருமானம் இல்லாததால் சுற்றுலா வழிகாட்டிகளும், ஷேர் ஆட்டோ டிரைவர்கள், சாலையோர வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்