பிரம்மோற்சவ விழாவில் உற்சவர்கள் தேரில் எழுந்தருளி உலா

சோழபுரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவில் உற்சவர்கள் தேரில் எழுந்தருளினர்.

Update: 2022-06-09 17:12 GMT

சோளிங்கர்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஜார் தெருவில் உள்ள கனககுஜம்பாள் சமேத சோழபுரீஸ்வரர் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடந்தது. 25 அடி உயரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர்களான கனககுஜம்பாள், சோழபுரீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்து அருள் பாலித்தனர்.

மேள தாளம் மற்றும் மங்கல வாத்தியங்கள் இசைக்கவும், பக்தி கோஷம் எழுப்பியும் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்தது. மாடவீதிகளில் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி காண்பித்தும் வழிபட்டனர்.

விழாவில் சோளிங்கர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து 15-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். சாமி தரிசனம் செய்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

முன்னதாக உற்சவர்களுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்