நீலகிரி வனப்பகுதி பசுமைக்கு திரும்பியது

தொடர் மழையால் நீலகிரி வனப்பகுதி பசுமைக்கு திரும்பியது. காட்டுத்தீ அபாயம் நீங்கியதால் வனத்துறையினர் நிம்மதி அடைந்து உள்ளனர்.

Update: 2023-05-17 22:00 GMT

ஊட்டி

தொடர் மழையால் நீலகிரி வனப்பகுதி பசுமைக்கு திரும்பியது. காட்டுத்தீ அபாயம் நீங்கியதால் வனத்துறையினர் நிம்மதி அடைந்து உள்ளனர்.

கோடை மழை

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் நவம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழையும் பெய்வது வழக்கம். இதேபோல் ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழை பெய்யும். நீலகிரி மாவட்டத்தை பொருத்தவரை தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை சராசரியாக 700 மில்லி மீட்டர் மற்றும் வடகிழக்கு பருவமழை சராசரியாக 300 மில்லி மீட்டரும், கோடை மழை 230 மில்லி மீட்டரும் பதிவாகும்.

ஆனால், கடந்தாண்டு வழக்கத்தை விட 124 சதவீதம் கூடுதலாக மழை பெய்தது. இந்தநிலையில் நீலகிரியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோடை மழை பெய்ய தொடங்கியது. வழக்கத்தை விட கோடை மழையும் அதிக அளவில் பெய்தது. இதனால் சராசரியான 230 மில்லி மீட்டர் அளவை ஏற்கனவே தாண்டி விட்டது.

காட்டுத்தீ அபாயம் நீங்கியது

தொடர் மழையால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. கல்லட்டி, கேத்தரின், லாஸ் பால்ஸ் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். கடந்த டிசம்பர் மாதம் முதல் உறைபனியால் வனப்பகுதிகளில் உள்ள புல்வெளிகள், மரங்கள் காய்ந்தன. இதனால் ஆங்காங்கே காட்டுத்தீ ஏற்பட்டு வந்தது.

தற்போது தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம், நீலகிரி வனக்கோட்டம், கூடலூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகள் பசுமைக்கு திரும்பி உள்ளது. இதனால் வனவிலங்குகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் பசுந்தீவனங்கள் கிடைக்கிறது. வழக்கமாக மே மாதம் வனப்பகுதிகள் வறண்டு காணப்படும். தற்போது பச்சை பசேல் என சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்து படைத்து வருகிறது. வனப்பகுதிகள் பசுமைக்கு திரும்பி உள்ளதால், காட்டுத்தீ ஏற்படும் அபாயம் நீங்கி உள்ளது. இதனால் வனத்துறையினர் நிம்மதி அடைந்து உள்ளனர். இதேபோல் ஊட்டிக்கு குடிநீர் வழங்கும் பார்சன்ஸ்வேலி, மார்லிமந்து உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் அதிகரித்து உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்