என்எல்சிக்கு எதிராக அடுத்த கட்ட போராட்டம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்பி பேட்டி

என்.எல்.சி.க்கு எதிராக அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கையில் இறங்குவேன் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

Update: 2023-04-02 18:45 GMT

திண்டிவனம், 


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

35 ஆயிரம் ஏக்கர் நிலம்

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியிலும், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியிலும், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த வடசேரி பகுதியிலும் நிலக்கரி எடுப்பதற்கு தமிழக அரசுக்கு தெரிவிக்காமல் மத்திய அரசு டெண்டர் விட்டுள்ளது.

அந்தந்த பகுதிகளில் 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ஏக்கர் வரை நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு தெரியவில்லை.

அடுத்தக்கட்ட நடவடிக்கை

நெய்வேலி பகுதியில் நிலக்கரி எடுத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து சென்னை ஐ.ஐ.டி. மூலமாக ஆய்வு மேற்கொண்டு 3 மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தை விட்டு என்.எல்.சி. நிர்வாகம் வெளியேற வேண்டும். புதிய பழுப்பு நிலக்கரி சுரங்கங்களுக்கு அனுமதி அளிக்க மாட்டோம் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க வேண்டும்.

என்.எல்.சி. நிலம் எடுப்பு விவகாரத்தில் விவசாயிகளுக்கும், வேளாண்மைக்கும் கடலூர் மாவட்ட கலெக்டர் ஆதரவாக இல்லாமல், என்.எல்.சி. நிர்வாகத்துக்கு துணையாக நிற்கிறார். மேலும் விவசாயிகள் கூட்டத்தில் என்.எல்.சி. குறித்து பேசக்கூடாது என தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திலும் என்.எல்.சி.க்கு நிலம் தர முடியாது என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இதை அறிந்த அதிகாரிகள் நேரடியாக ஊராட்சிகளுக்கு சென்று மிரட்டுகிறார்கள். எனவே என்.எல்.சி. நிர்வாகத்திற்கு எதிராக அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கையில் இறங்க உள்ளேன். அது குறித்து பின்னர் அறிவிப்பேன்.

போதையால் அதிக குற்றங்கள்

சுங்கச்சாவடி கட்டண உயர்வு என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. தமிழகத்தில் மது, கஞ்சா போன்ற போதை பொருட்கள் அதிகமாக புழங்குவதால் அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போதையால் தான் அதிகளவு குற்றங்கள் நடைபெறுகிறது.

இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்