3 லட்சத்து 83 ஆயிரம் வீடுகளில் தேசிய கொடி பட்டொளி வீசி பறந்தது
3 லட்சத்து 83 ஆயிரம் வீடுகளில் தேசிய கொடி பட்டொளி வீசி பறந்தது
75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 83 ஆயிரம் வீடுகளில் தேசிய கொடி பட்டொளி வீசி பறந்தது.
பல்வேறு நிகழ்ச்சிகள்
திருவாரூர் மாவட்டத்தில் 75-வது சுதந்திர திருநாள் அமுதபெருவிழாவினை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. சுதந்திர விழாவை சிறப்பாக கொண்டாட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக அனைத்து வீடுகளிலும் நேற்று முதல் நாளை (திங்கட்கிழமை) வரை 3 நாட்களுக்கு தேசிய கொடியை ஏற்றி பறக்க விட வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர் ஆகிய 4 நகராட்சிகளுக்கு 50 ஆயிரத்து 633 வீடுகளிலும், குடவாசல், கொரடாச்சேரி, நீடாமங்கலம், நன்னிலம், பேரளம், முத்துப்பேட்டை, வலங்கைமான் ஆகிய 7 பேரூராட்சிகளில் 17 ஆயிரத்து 900 வீடுகளிலும், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம், வலங்கைமான், நன்னிலம், குடவாசல், கோட்டூர், கொரடாச்சேரி ஆகிய 10 ஒன்றியங்களில் உள்ள 3 லட்சத்து 14 ஆயிரத்து 889 வீடுகளிலும் தேசிய கொடி வழங்கப்பட்டு பறக்க விடப்பட்டன.
தியாகராஜர் கோவில் கோபுரத்தில் பறந்த தேசிய கொடி
இதில் திருவாரூர் ஒன்றியம் மாங்குடியில் வீடுகளில் ஏற்றப்பட்ட தேசிய கொடியினை ஒன்றியக்குழு தலைவர் புலிவலம் தேவா பார்வையிட்டார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி, சித்ரா குருநாதன், துணைத்தலைவர் ரவிச்சந்திரன், ஊராட்சி செயலாளர் இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதேபோல் புலிவலம் ஊராட்சி விஷ்ணுதோப்பு பகுதியில் தேசிய கொடி ஏற்றப்பட்டதை ஒன்றியக்குழு தலைவர் பார்வையிட்டார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து, துணைத்தலைவர் கார்த்தி, செயலாளர் தங்கதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருவாரூர் தியாகராஜர் கோவில் ராஜகோபுரத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டு கம்பீரமாக பறந்ததை பார்த்து பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதேபோல் நகர் பகுதியில் உள்ள வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள் என திரும்பு திசை எல்லாம் தேசிய கொடி பறக்க விடப்பட்டிருந்தது. திருவாரூர் மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், 10 ஒன்றியங்கள் என மொத்தம் 3 லட்சத்து 83 ஆயிரத்து 422 வீடுகளில் தேசிய கொடி பட்டொளி வீசி பறந்தது.
தபால் நிலையங்களில் விற்பனை
திருவாரூர் மாவட்டத்தில் தபால் நிலையங்கள் மூலம் தேசிய கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி திருவாரூர், மன்னார்குடி தலைமை தபால் நிலையங்கள், 47 துணை தபால் நிலையங்கள், 81 கிளை தபால் நிலையங்கள் என 130 தபால் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதுவரை 9 ஆயிரத்து 500 தேசிய கொடிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒரு கொடி விலை ரூ.15 என்ற நிலையில் ரூ.2 லட்சத்து 37 ஆயிரத்து 500 மதிப்பில் தேசிய கொடிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.